அமிர்தசரஸ்; பஞ்சாப் பாடகர் சுட்டுக்கொல்லபட்ட சம்பவத்தில் கனடாவை மையமாக கொண்டு செயல்படும் தாதா கும்பலுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பஞ்சாப் பாடகரும், அம்மாநில காங்., கட்சியின் முக்கிய பிரமுகருமான சித்து மூஸ்வாலா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மான்ஸா நகரில் தனது வாகனத்தில் அவர் வந்த போது, மர்ம நபர்கள் அவரது வாகனத்தின் மீது 30 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இத்தாக்குதலில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை கடந்த 26ம் தேதி ஆம் ஆத்மி அரசு வாபஸ் பெற்றது. இந்நிலையில், அடுத்த 3 நாட்களில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது அரசியல் படுகொலை என காங்., கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மூஸ்வாலா ஆம்ஆத்மி அரசை தனது பாடலில் கடுமையாக விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக்கொலை தொடர்பாக பஞ்சாப் டி.ஜி.பி. வீகே பவ்ரா கூறியதாவது:

பாடகர் கொலை தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம். கொலையாளிகள் சுட்டு கொன்றபின்னர் காரில் தப்பி சென்றுள்ளனர். மேலும் கனடாவை சேர்ந்த லாரன்ஸ் பிஸ்னாய், பிரார் தாதா கும்பல் பேஸ்புக்கில் சில பதிவுகளில் இந்த கொலைக்கு பொறுப்பேற்றுள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல கிரிமினில் வழக்குகள் உள்ளன. 2 பாதுகாப்பு வீரர்கள் பணியில் இருந்தும் பாடகர் பாதுகாவலர் இல்லாமல் சென்றுள்ளார். அவர் தனது புல்லட்புரூப் காரையும் பயன்படுத்தாமல் மாற்று காரில் போயுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
கொலையாளிகளை பிடிக்க சிறப்பு படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு டி.ஜி.பி கூறினார்.