வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி., ஆக எனக்கு தகுதியில்லையா என காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவிடம், அக்கட்சியை சேர்ந்த நடிகை நக்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் காலியாகும் ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டது. அதில் பல முக்கிய நபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாததால், அக்கட்சியில் அதிருப்தி எழுந்துள்ளது.
இந்நிலையில், அக்கட்சியை சேர்ந்த நடிகை நக்மா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 2003- 04ம் ஆண்டில் சோனியாவின் விருப்பத்தின் பேரில் காங்கிரசில் இணைந்த போது, ராஜ்யசபா தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என தனிப்பட்ட முறையில் உறுதி அளித்திருந்தார்.
அப்போது, காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. அதன்பிறகு 18 ஆண்டுகள் ஆகியும் கூட இன்னும் ஒரு வாய்ப்பை கூட அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், மஹாராஷ்டிராவில் இருந்து இம்ரான் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. நான் தகுதி குறைந்தவளா என்று கேட்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் நக்மா கூறியுள்ளார்.
அதிருப்தி
இதனிடையே, ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, முகுல் வாஸ்னிக் மற்றும் பிரமோத் திவாரி ஆகியோர் ராஜஸ்தானில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆனால், 3 பேரும் அம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் இல்லை. இதனால், ராஜஸ்தான் மாநில காங்கிரசில் அதிருப்தி எழுந்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி எம்.எல்.ஏ., சன்யம் லோதா கூறுகையில், ராஜ்யசபா தேர்தலில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நிர்வாகி மற்றும் தொண்டரை தேர்வு செய்யாத காரணத்தை காங்கிரஸ் மேலிடம் விளக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
ராஜஸ்தானை சேர்ந்த பவன் கேதா என்பவரை, ராஜ்யசபா எம்.பி.,யாக்க அக்கட்சி பரிசீலனை செய்த நிலையில், நேற்று வெளியான பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. இது தொடர்பாக அவர் கூறுகையில், எனது பெயர் விடுபட்டதற்கு ஏதோ ஒன்று நடந்துள்ளதாக கூறியுள்ளார்.