சென்னை: என்னை பார்த்து பயப்படுவதற்கு நான் என்ன சிங்கமா, புலியா? காங்கிரசின் கொள்கையை பார்த்து மத்திய அரசு பயப்படுகிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ராஜ்யசபா தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர், சென்னை வந்த அவர், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் நேரில் சந்தித்து பேசினார்.பின்னர் அவர், இன்று( மே 30), தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, அமைச்சர்கள் சேகர்பாபு, துரைமுருகன், மா.சுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதாரணி உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர் சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது: புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை பற்றி புதிதாக நான் கூறுவதற்கு எதுவும் இல்லை. 2 நாட்களுக்கு முன்னர் ஷாருக்கான் மகன் வழக்கு எந்த விதத்தில் முடிந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த அமைப்புகள் மீது ஜார்க்கண்ட் முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். லோக்சபா காங்கிரஸ் எம்.பி., தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனை பார்த்து நீங்கள் முடிவு எடுக்க வேண்டும். சாதாரண மக்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.
என்னை பார்த்து யாரும் பயப்படுவதற்கு நான் என்ன சிங்கமா? புலியா? நான் மனிதன். காங்கிரசை பிரதிபலிக்கும் மனிதன். காங்கிரஸ் கொள்கையை அழுத்தமாக எழுதி சொல்பவன். அவர்கள் என்னை பார்த்து பயப்படுவதாக நான் நினைக்கவில்லை. அப்படி பெருமைப்பட்டு கொள்ளக்கூடாது. காங்கிரஸ் கொள்கையை கண்டு அஞ்சுகிறார்கள்.

பிரதமர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரை குறித்து விமர்சனம் செய்வது தவறு. சென்னை வந்த பிரதமருக்கு தமிழக அரசு உரிய மரியாதை அளித்து 32 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்திருக்கிறார்கள். அதுவே பெரிய மரியாதை. பிரதமர் தனது அரசின் சாதனைகளை விளக்கி சொல்கிறார் அது சரி. முதல்வர் மாநில திட்டங்களுக்கு நிதி தேவையை எடுத்து சொல்வதும் சரி. இரண்டு பேரும் பேசுவதும் சரி.ஒருவர் பேசியது சரி மற்றொருவர் பேசியது தவறு என கூறக்கூடாது.
வழக்கத்தில் சென்ட்ரல் கவர்ன்மென்ட்( மத்திய அரசு ) எனக்கூறினாலும், அரசியல் சாசனத்தில் யூனியன் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆயிரகணக்கான குழந்தைகள் கிறிஸ்தவ நிறுவனங்களில் படிக்கின்றனர். நானும் படித்துள்ளேன். யாரும் மதமாற்றம் செய்ய முயற்சி செய்யவில்லை. இது தவறான குற்றச்சாட்டு. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.