வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கடலுார்-காவிரி டெல்டா பாசனத்திற்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கடலுார் மாவட்ட டெல்டா பகுதியில் கால்வாய்கள் துார்வாரி சீரமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
![]()
|
தமிழகத்தின் டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வதற்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டூரில் இருந்து பாசனத்திற்கு குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்படாத நிலையில், கடந்த ஆண்டு, ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்பட்டது.இதனால், கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் வரையில் குறுவை, அக்டோபரில் துவங்கி ஜனவரி வரையிலான காலத்தில் சம்பா ஆகிய இருபோக சாகுபடி செய்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.
அதே போன்று இந்த ஆண்டு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் 117 அடியை தொட்டது. இதனையடுத்து மேட்டூர் அணையிலிருந்து முன்னதாகவே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த 24ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் தண்ணீரை திறந்து விட்டார். உரிய காலத்தில் திறக்கப்பட்டதால், கீழணை மற்றும் வீராணம் ஏரிக்கு தண்ணீர் விரைவில் வந்துவிடும். குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் கிடைப்பதால் குறுவை சாகுபடியை கடலுார் மாவட்ட டெல்டா பாசன விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
மேலும், காவிரி தண்ணீர் விவசாயிகளுக்கு தடையின்றி கடைமடை வரையில் சென்று சேருவதற்கு வசதியாக காவிரி டெல்டா பகுதியில் துார் வாரும் பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.அந்த வகையில், கடலுார் மாவட்டத்தில் 122 பாசன வாய்க்கால்கள், 31 வடிகால்கள், கிளை வாய்க்கால்கள் துார் வாரும் பணிகள் நடந்து வருகிறது.
![]()
|
இதுவரையில், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் 90 சதவீததத்திற்கும் மேல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இப்பணிகளை, மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கலெக்டர் பாலசுப்ரமணியம், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து வருகிறார். பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்க பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், துார்வாரும் பணி தரமாக நடப்பதை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர், வேளாண் துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாசன வாய்க்கால் முழுமையாக துார்வாரப்படுவதால், கடலுார் மாவட்டத்தில் 58,655 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், சாகுபடி பணிகளை விவசாயிகள் துவங்குவதற்கு உதவியாக கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்குவது, குறுகிய கால நெல்விதை, உரம் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்வது போன்றவற்றில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும், விவசாய சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.