வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தேனி : தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் அரசியல்வாதிகள், தனிநபர்களால் ஆக்கிரமிப்புக்குள்ளான ரூ.150 கோடி மதிப்புள்ள 216 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களை மீட்ட பெரியகுளம் சப் -கலெக்டர் ரிஷப் மாற்றப்பட்டார்.
பெரியகுளம் சப்-கலெக்டராக ரிஷப் 2021 ஜூலை 7 பொறுப்பேற்றார். அடுத்த சில மாதங்களிலேயே வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம் பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களின் டிஜிட்டல் 'அ' பதிவேடுகளை அதிகாரிகள் திருத்தி தனிநபர்களுக்கு பட்டா பதிவு செய்து கொடுத்த மோசடியை அறிந்தார்.
இதில் அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ், முன்னாள் ஆர்.டி.ஓ.,க்கள் ஆனந்தி, ஜெயபிரித்தா, சர்வேயர்கள் உட்பட 15 பேர் மீது அரசியல்வாதிகளின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் நடவடிக்கை எடுத்தார். இவர்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு சர்வேயர், உதவியாளர், ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
துணைத்தாசில்தர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ரூ.150 கோடி சந்தை மதிப்புள்ள ஆக்கிரமிக்கப்பட்ட 216 ஏக்கரை அரசு நிலங்களாக பட்டா பதிவு செய்தார். இதற்காக ரிஷப்பை தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டினர்.

மஞ்சளாறு அணை அருகே அரசுக்கு சொந்தமான 150 ஏக்கர் அரசு நிலங்களை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதை கண்டறிந்து விசாரணையை துவக்கிய நிலையில் அரசியல் அழுத்தத்தால் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி சப்-கலெக்டராக மாற்றப்பட்டார். சப்கலெக்டர் மாற்றத்தால் அரசு நில அபகரிப்பு நீர்த்து போகும் நிலை உருவாகும். இவரது காலத்தில் மணல் திருட்டும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.