வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு அனுப்பிய கடிதம்:
பி.வினோத்ராஜன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பஞ்சாப் மாநிலத்தில், சுகாதாரத் துறை ஒப்பந்தம் வழங்க, ஒரு சதவீதம் கமிஷன் கேட்ட, அம்மாநில அமைச்சர் விஜய் சிங்லா பதவி நீக்கம் செய்யப்பட்டார்; அத்துடன், லஞ்ச வழக்கில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். விஜய் சிங்லா லஞ்சம் கேட்பதாக வந்த புகாரை அடுத்து, 'ஸ்டிங் ஆப்பரேஷன்' வாயிலாக, அந்தப் புகாரை உறுதி செய்த, மாநில முதல்வராக பதவி வகிக்கும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் எடுத்துள்ள, இந்த அதிரடி நடவடிக்கையை பார்த்து நாடே வியந்து நிற்கிறது. இதன் வாயிலாக, தன் நேர்மையை முதல்வர் மான் நிரூபித்துள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, அடிக்கடி ஊழல் புகார்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், 2014ல் பிரதமராக மோடி பதவியேற்ற பின், அமைச்சர்கள் உட்பட யார் மீதும், ஊழல் புகார் சுமத்த முடியாத நிலைமை உருவானது. 'தானும் லஞ்சம் வாங்குவதில்லை; மற்றவர்களையும் வாங்க விடுவதில்லை' என்ற ரீதியில் மோடி செயல்பட்டு வருகிறார். இதனால், மோடியின் நேர்மை மீது, யாரும் சந்தேகம் கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது. கடந்த, 2019 லோக்சபா தேர்தலின் போது, ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போட்டதில், ஊழல் நடந்ததாக காங்., தலைவராக இருந்த ராகுல் புகார் கூறினார். ஆனாலும், மோடி மீது அவர் சுமத்திய ஊழல் புகார் பிசுபிசுத்தது. அந்த தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றது; மோடி மீண்டும் பிரதமரானார்.

இந்தச் சூழ்நிலையில், பிரதமர் மோடி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலையே மிஞ்சும் வகையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் நடவடிக்கை அமைந்துள்ளது. முதல்வராக பதவியேற்று, இரண்டு மாதங்கள் மட்டுமே முடிந்த நிலையில், ஊழல் புகாருக்காக அமைச்சரை பதவி நீக்கம் செய்த அவரின் செயல் பாராட்டத்தக்கதே. அதேநேரத்தில், 'ஆரம்ப சூரத்தனம்' என்பது போல இல்லாமல், தன் நிர்வாகத்தில் ஒரு காசு கூட ஊழல் இருக்காது என்பதை, ஐந்தாண்டு பதவிக்காலம் முழுதும், அவர் உறுதி செய்ய வேண்டும்.
அப்படி ஒரு சூழ்நிலையை பகவந்த் மான் உருவாக்கினால், பஞ்சாபில் அவரே நிரந்தர முதல்வராக இருப்பார். அதுமட்டுமின்றி, மேலும் சில மாநிலங்களிலும், ஆம் ஆத்மி கட்சி, ஆட்சியை பிடிக்க முடியும் என்பது நிச்சயம். வாரிசு அரசியலை வளர்ப்பது மட்டுமின்றி, விஞ்ஞான ரீதியாக எப்படி எல்லாம் ஊழல் செய்யலாம் என, 'ரூம்' போட்டு யோசிக்கும் தி.மு.க.,வினருக்கு, பஞ்சாப் முதல்வரின் செயல், சாட்டையடியாக அமைந்துள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.