யூ டியூப்பர் கார்த்திக் கோபிநாத் என்ன தவறு செய்தார்?| Dinamalar

'யூ டியூப்பர்' கார்த்திக் கோபிநாத் என்ன தவறு செய்தார்?

Updated : ஜூன் 02, 2022 | Added : மே 31, 2022 | கருத்துகள் (167) | |
பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் கோவில் சிலைகள் புனரமைப்பு பணிக்கு நிதி திரட்டி, மோசடி செய்துவிட்டார் என்ற வழக்கில், 'யூ டியூப்பர்' கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அதற்காக, 'மிலாப்' என்ற வலைத்தளத்தைப் பயன்படுத்தினார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.உண்மையில், 'மிலாப்' என்றால் என்ன, அதன் வாயிலாக திரட்டிய பணத்தை, தன் சுய லாபத்துக்காக
YouTuber, Karthick Gopinath, கார்த்திக் கோபிநாத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் கோவில் சிலைகள் புனரமைப்பு பணிக்கு நிதி திரட்டி, மோசடி செய்துவிட்டார் என்ற வழக்கில், 'யூ டியூப்பர்' கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அதற்காக, 'மிலாப்' என்ற வலைத்தளத்தைப் பயன்படுத்தினார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

உண்மையில், 'மிலாப்' என்றால் என்ன, அதன் வாயிலாக திரட்டிய பணத்தை, தன் சுய லாபத்துக்காக கார்த்திக் கோபிநாத் பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இது தொடர்பான விவரம் தெரிந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறியதாவது:

'மிலாப், கீட்டோ, கிவ் இந்தியா' போன்றவை பொதுமக்களிடம் இருந்து நல்ல திட்டங்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் பணம் திரட்டுவதற்கான, 'கிரவுட் சோர்சிங்' வலைத்தளங்கள். அதற்கு, அவர்கள் ஒரு சிறிய தொகையை கமிஷனாக பெறுகின்றனர். இதில், யார் வேண்டுமானாலும், நிதி திரட்டுவதற்கான கோரிக்கையை முன்வைக்கலாம். சமீபத்தில் கூட, 'ஒரு குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்; அதற்கு நிதி உதவி அளியுங்கள்' என்ற வீடியோ, 'யூ டியூப்'பில் வந்ததைப் பார்த்திருப்பீர்கள்.


latest tamil newsஇத்தகைய கோரிக்கையைப் பார்த்துவிட்டு, மக்கள் தங்களால் ஆன சிறு தொகையை தருவர்.இதில் முக்கியமான அம்சம் என்னவெனில், பணம் திரட்ட முயற்சி செய்வோர், அதற்கான அடிப்படை காரணத்தையும், அதற்கான செயல் திட்டம் மற்றும் வழிமுறைகளை, 'மிலாப்' தளத்துக்குத் தெரிவிக்க வேண்டும். அத்தகவல்கள் அனைவரும் பார்க்கும் வண்ணம், வலைத்தளத்தில் வெளியிடப்படும். மேலும், நிதி திரட்டுபவர் உண்மையாகவே அவர் சொல்லும் காரணத்துக்காகத் தான் நிதி திரட்டுகிறாரா என்பதும் உறுதி செய்யப்படும்.

அதன் பின்தான், வலைத்தளத்தில் அந்த நிதி திரட்டும் கோரிக்கை ஏற்கப்பட்டு, வெளியிடப்படும். வீடியோக்கள் தயார் செய்யப்பட்டு பரப்பப்படும்.இத்தகைய திட்டத்தைப் பார்த்துவிட்டு, நல்ல மனங்கள் சின்னச் சின்ன தொகையாக அன்பளிப்பு செய்வர். அவை, 'மிலாப்' நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். நிதி திரட்டுவோர், தாங்கள் வைத்த கோரிக்கை எவ்வளவு தொகையைத் திரட்டியுள்ளது என்பதை, அவ்வப்போது வலைத்தளம் வாயிலாக பார்த்துக் கொள்ள முடியும்.

கணிசமான தொகை சேர்ந்தவுடன், 'மிலாப்' வலைத்தளத்திடம் இருந்து, அந்தத் தொகையை விடுவிக்க கோரிக்கை வைக்க வேண்டும்.இப்போது, 'மிலாப்' வலைத்தளம், 'உங்கள் திட்டப்படி என்ன நடவடிக்கை மேற்கொண்டீர்கள்; அதில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன; எவ்வளவு தொகையைச் செலவு செய்துள்ளீர்கள்; அதற்கான ரசீதுகளை வலையேற்றுங்கள்' என்று சொல்லும். சரியான ரசீதுகளும், முன்னேற்றமும் காட்டப்பட்டால், அந்த நபருக்கு பணம் விடுவிக்கப்படும்.

அவசர மருத்துவ சிகிச்சைக்கான நிதி திரட்டும் திட்டம் என்றால், அங்கே கொஞ்சம் சலுகை காட்டப்படும். நேரடியாக மருத்துவமனையின் வங்கிக் கணக்குக்கே பணம் போய்ச் சேர வாய்ப்பு வழங்கப்படும். அதாவது, மக்களுடைய பரிவையும், கருணையையும் யாரும் கபளீகரம் செய்துவிடக் கூடாது என்பதில், 'மிலாப்' வலைத்தளம் தெளிவாக இருக்கிறது. உரிய பலன் கிடைத்தால் தான், திரட்டப்பட்ட பணம் விடுவிக்கப்படும்.

சிறுவாச்சூர் கோவில் விஷயத்தில், 'மிலாப்' வலைத்தளத்தில் 33 லட்ச ரூபாய்க்கு மேல் திரட்டப்பட்டுள்ளது. அவர்களுடைய திட்டப்படி கோவில் புனரமைப்பு பணி துவங்கி, முன்னேற்றம் ஏற்பட்டால் தான், அத்தொகை படிப்படியாக விடுவிக்கப்படும். மக்கள் பணம் பத்திரமாக இருக்கிறது என்றே புரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

-- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X