கோவை: கோவையில் சர்வதேச தரத்திலான சி.பி.,முத்திரை பதிக்கும் ஆய்வுக்கூடத்தை அமைக்க வேண்டும் என்று, தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் தமிழக அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர். இது, கோவைக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய பம்ப் உற்பத்தி துறைக்கும் திருப்புமுனையாக அமையும் என்று, நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
நாட்டின் பம்ப் தயாரிப்பில், 80 சதவீதத்திற்கும் மேல் இருந்த தமிழகத்தின் பங்களிப்பு, 55 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனாவின் தாக்கம், மூலப்பொருட்களின் அபரிமிதமான விலை உயர்வு, ஜி.எஸ்.டி., செலுத்துதல் உள்ளிட்ட பல காரணங்கள், தொழில்துறைக்கு பாதகமாக அமைந்து விட்டன. இதிலிருந்து விடுபட கோவை மாவட்ட நிர்வாகமும், தொழில் அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழக தொழில் துறை அமைச்சரை சந்தித்து, இது தொடர்பாக தொழில் அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதில், கோவையில் உள்ள பம்ப்செட் ஆய்வுக்கூடத்தை, நவீனமயமாக்கும் கோரிக்கை முக்கியமானது.
இது தொடர்பாக, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் 'சீமா' அளித்த மனுவில், 'கோவையிலுள்ள 'சிட்டார்க்' ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக்கூடம், நம் நாட்டின் 'பம்ப்' சோதனைக்கான சிறப்பு மையமாக, (சென்டர் பார் எக்சலன்ஸ்)செயல்பட்டு வருகிறது.இம்மையத்தை, சர்வதேச தர'பம்ப்' ஏற்றுமதிக்கானசி.பி.முத்திரை பதிக்கும், சி.பி.டி.எல்., ஆய்வுக்கூடமாக உயர்த்த வேண்டும்' என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வு கூடம் தரம்உயர்த்தப்படும் பட்சத்தில், கோவை மட்டுமல்லாமல் நம் நாட்டில் தயாரிக்கப்படும் 'பம்ப்' அனைத்துக்கும், 'சி.பி.,' முத்திரை பதிக்கலாம்.தற்போது இந்த முத்திரை பதிப்பதற்கு, சி.பி.டி.எல்., ஆய்வுக்கூடம் அமைந்துள்ள, சீனா, ஐரோப்பிய நாடுகளுக்கு, மோட்டார்களை அனுப்பி வைக்க வேண்டியுள்ளது. அதற்கு பதிலாக, கோவையிலுள்ள சிட்டார்க் ஆய்வுக்கூடத்தை, சி.பி.டி.எல்., ஆய்வுக்கூடமாக தரம் உயர்த்த வேண்டும்.
அதற்கான இடவசதி உள்ளிட்ட அனைத்தும் உள்ளதால், தமிழக அரசு இதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று, தொழில் துறையினர் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

கால அவகாசம் குறையும்
தற்போதுள்ள சிட்டார்க் ஆய்வுக்கூடத்தை, சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதன் வாயிலாக, சி.பி., முத்திரைக்காக வெளிநாடுகளுக்கு சென்று வரும் காலஅவகாசம் குறையும். சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் எளிதாகும். நவீன ஆய்வு கூடம் அமைந்து விட்டால், நம் நாட்டில் முத்திரை அனுமதி பெற, பல நாடுகளின் பம்ப்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. இதனால், நாட்டின் அன்னிய செலாவணி அதிகரிக்கும்; தொழில் சார்ந்த தொடர்புகள் பெருகும்.- கார்த்திக், தலைவர்தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம் (சீமா)
சி.பி.டி.எல்., சிறப்பு இது!
தரத்திற்கும் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையிலான உபகரணங்கள் இந்த ஆய்வுக்கூடத்தில் இருக்கும். தரத்திலோ, பாதுகாப்பிலோ சிறு மாற்றம் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்படும். இந்த ஆய்வுக்கூடம், மோட்டார் பம்ப்களுக்கு மட்டுமல்ல, உற்பத்தித்துறையில் இருக்கும் அனைத்து மின் சாதனங்களையும் சோதித்து தரச்சான்று அளிக்கும் மையமாகும். அரசு மற்றும் மிகப்பெரும் நிறுவனங்கள் மட்டுமே, இது போன்ற நவீன ஆய்வுகூடத்தில் முதலீடு செய்ய முடியும்.