வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தனக்கு ராஜ்யசபா 'சீட்' வழங்காததால் கட்சி தலைமை மீது கோபத்திலும், அதிருப்தியிலும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ௧௦ம் தேதி நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலில், காங்., மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா இருவரும் தங்களுக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு காங்., அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. இந்த இருவருமே காங்., அறிவித்த, ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.
அதிர்ச்சி
![]()
|
இதனால் இருவரும், இவர்களது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த, ௨௦௧௪ லோக்சபா தேர்தல் முதல் காங்கிரஸ் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், குலாம் நபி ஆசாத் தலைமையில் தான் ௨௩ காங்., தலைவர்கள், கட்சி தலைமையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனக் கோரி, சோனியாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர். அது முதல் அந்த கடிதத்தில் கையொப்பமிட்ட தலைவர்களில் ஒரு சிலரைத் தவிர்த்து, பெரும்பாலானோரை கட்சி தலைமை புறக்கணித்து வருகிறது.
சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சிந்தனையாளர் கூட்டத்திற்கு குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இது ஜம்மு - காஷ்மீரில் குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்., கட்சி தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது ராஜ்யசபா உறுப்பினராகும் வாய்ப்பும் பறிபோன நிலையில் குலாம் நபி ஆசாத் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
இதை கேள்விப்பட்ட சோனியா, குலாம் நபி ஆசாத்தை தொலைபேசியில் அழைத்து டில்லி வருமாறு கூறியுள்ளார். அதன்படி குலாம் நபி ஆசாத் டில்லி சென்று சோனியாவை சந்தித்து
உள்ளார். அப்போது காங்., தலைமைக்கு அடுத்து இரண்டாவது இடத்தை குலாம் நபி ஆசாத்துக்கு அளிப்பதாக சோனியா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் குலாம் நபி ஆசாத் அந்த பொறுப்பை ஏற்க மறுத்து விட்டதுடன், கடும் அதிருப்தியிலும், கோபத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய தலைமுறை
இதையடுத்து இந்த பதவியை, 'புதிய தலைமுறையினருக்கு கொடுங்கள்' என, நாசுக்காக சோனியாவிடம் கூறி குலாம் நபி ஆசாத் நழுவி விட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் தான் காங்., மூத்த தலைவரும் பிரபல வழக்கறிஞருமான கபில் சிபல், தனக்கு ராஜ்யசபா சீட் கிடைக்காது என்ற யூகத்தில் கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில், அதுபோன்ற முடிவை குலாம் நபி ஆசாத் எடுப்பாரா என, அவரது ஆதரவாளர்கள்
மத்தியில் பேச்சு கிளம்பி உள்ளது.