வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மயிலாடுதுறை--''சிதம்பரம் கோவிலை ஹிந்து சமய அறநிலையத்துறை ஏற்றுக் கொள்ளும் திட்டம் இல்லை,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
![]()
|
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவிலுக்கு, நேற்று காலை தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வந்தார். கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் கோவிலுக்குள் சென்று கோ பூஜை கஜ பூஜை செய்து, தரிசனம் செய்தார்.தொடர்ந்து, தருமபுரம் ஆதீன திருமடத்தில், 27வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர், குருமஹாசன்னிதானம் முன்னிலையில் ஆதீனத்தின் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையை திறந்து வைத்த அமைச்சர் சேகர்பாபு, மரக்கன்றுகளை நட்டு வைத்து, பாடசாலையை பார்வையிட்டார். அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லுாரியில் வெள்ளி விழா, பொன் விழா ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சி நடைபெற்றது. பவள விழாவிலும் தி.மு.க., ஆட்சி நடைபெறுவதால், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என, குரு மஹா சன்னிதானத்தின் விருப்பத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்.ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தொன்மையான கோவில்களுக்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 80 கோவில்களில் விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும். தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட 27 கோவில்களில், தி.மு.க., ஆட்சியில் 18 கோவில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, திருப்பணி செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மலை கோவில்களான வெள்ளியங்கிரி நாதர், சதுரகிரி, நரசிம்மன் கோவில், பருவதமலை, கண்ணகி கோவில் ஆகிய ஐந்து கோவில்களில் ஆய்வுக்கு, 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழமை மாறாமல் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வழிபடுவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக குழு அமைக்கப்படும்.சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை தரிசனத்திற்கு, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. அதுபோல தருமபுரம் ஆதீனம் நிர்வகிக்கும் கோவில்களில் எந்த புகாரும், சர்ச்சையும் ஏற்படவில்லை.
![]()
|
சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தவரை, தீட்சதர்களுக்குள் உள்ள பிரச்னை, தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பிரச்னை என, பல புகார்கள் வந்துள்ளன. புகார்கள் குறித்து ஆய்வு செய்யவே அறநிலையத்துறை சார்பில் கடிதம் அனுப்பியுள்ளோம்.திருக்கோவிலை அறநிலையத் துறை ஏற்றுக் கொள்ளும் என, நாங்கள் கூறவில்லை. பொது கோவில்களில் புகார்கள் வந்தால், அதை விசாரிக்க அறநிலையத் துறைக்கு உரிமை உண்டு. இது தீட்சிதர்களுக்கு, தில்லை நடராஜர் கோவில் நிர்வாகத்திற்கு எதிரான நடவடிக்கை இல்லை.
சிறந்த முறையில் நடைபெறும் நிர்வாகம், கோவில்களை அறநிலையத் துறை கையில் எடுக்க முயற்சிக்கக் கூடாது என, முதல்வர் அறிவுறுத்திஉள்ளார். சட்டத்திற்கு புறம்பான செயல்கள் இருந்தால் தான், அந்த கோவில்கள் குறித்து விசாரணை நடத்துவோம். இறையன்பர்கள் மகிழ்ச்சி தான், அறநிலையத் துறையின் மகிழ்ச்சி.இவ்வாறு சேகர்பாபு கூறினார்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement