கோபால்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டி அதிகாரிபட்டியில் பூட்டியிருந்த மளிகை கடையை உடைத்து 30 பவுன் நகை, ரூ. 12 லட்சத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடுகின்றனர்.
அதிகாரிபட்டியில் மளிகை கடை நடத்தி வருபவர் மனோகரன் 62. கடைக்கு பின்புறம் வீடு உள்ளது. நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டில் துாங்கினார். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க வீட்டை திறந்தபோது வெளிப்புறமாக வீடு பூட்டியிருந்தது. அதிர்ச்சியடைந்த மனோகரன் சத்தம் போட்டதால் பக்கத்து வீட்டினர் கதவை திறந்தனர். வெளியில் பார்த்தபோது மளிகை கடையின் கூரை ஓடுகள் உடைந்து சிதறி கிடந்தன.
மளிகை கடையை திறந்தபோது கல்லாவில் இருந்த ரூ.12 லட்சம், 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.இடம் விற்ற பணத்தை கடையில் வைத்திருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அப்பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கொள்ளையர்களை தேடும் பணியில் சாணார்பட்டி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதே கடையில் மூன்று ஆண்டுகளுக்கு முன் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.