மதுரை:இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல... செடி, கொடி, மரம், விலங்குகள் என அத்தனை பிற உயிரினங்களுக்குமானது என்ற உணர்வு தான் சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வை நமக்கு தரும். இந்த பூவுலகை நம் எதிர்கால சந்ததிக்கு அப்படியே தர வேண்டும் என்றால் நாம் சுற்றுசூழலை காக்க வேண்டும். இதனை புரிந்து கொண்ட சிலர் சுற்றுச்சூழலை பேணி காக்கின்றனர். அவர்களால் தான் இன்னும் இயற்கை நம்மை காத்துவருகிறது.சுற்றுச்சூழல் தினமான இன்று சூழலை காக்கும் செயல்வீரர்கள் சிலரை பேட்டி கண்டோம். அவர்கள் கூறியதாவது:
மரங்கள் இருக்க வேண்டிய இடத்தில் ரோடா
டாக்டர் பத்ரி நாராயணன், பறவைகள் ஆராய்ச்சியாளர், மதுரை: தேன்சிட்டு போன்ற பறவைகள் செடி, கொடிகளின் அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன. விவசாயத்தின் போது புழு, பூச்சி தொல்லை அதிகமாக இருக்கும். இந்த பூச்சிகளை தகை விலான், ஸ்வாலோ, உழ வாரன் குருவிகள் (பனைமரத்தை சார்ந்தது) சாப்பிட்டு பயிர்களை காக்கும்.ஒரு ஏக்கரில் பயிர்களை சுற்றிலும் நாட்டு மரங்களை உயிர்வேலியாக நடும் போது இந்த பறவைகளை பாதுகாக்க முடியும்.
நீராதாரங்களில் ரசாயன, தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலந்தால் மீன்கள், அவற்றை உண்ணும் பறவைகளின் உடலில் நஞ்சு சேர்ந்து இறந்து விடும். எனவே சுற்றுச்சூழல் உயிரியல் காரணியாக பறவைகளை சொல்லலாம். தோட்டங்கள், அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் அயல்நாட்டு மரம், செடிகளை வளர்க்கின்றனர். அயல்நாட்டு மரங்களை நடுவதை தவிர்க்க வேண்டும். மதுரைக்கு சொந்தமானது கடம்ப மரங்கள். அவற்றை அதிகம் வளர்க்க வேண்டும். உள்நாட்டு மரங்களை வளர்க்கும் போதுதான் உண்மையான சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
சிலப்பதிகாரத்தில் வைகை வனப்பு என்ற பகுதியில் கோவலன், கண்ணகி கவுந்தியடிகள், மதுரை வந்தபோது வைகை கரையில் 20, 30 மரங்களின் பூக்கள் தண்ணீரில் கலந்திருந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது வைகை கரை முழுவதும் சிமென்ட் தளமாகி விட்டது. மரங்கள் இருக்க வேண்டிய இடத்தில் ரோடா. நம்நாட்டு மரங்கள் என்னென்ன என்பதை புரிந்து கொண்டு அவற்றை வளர்த்தால் உள்நாட்டு பறவைகள் பெருகும். அவற்றின் மூலம் விவசாயத்தை அழிக்கும் புழு, பூச்சிகளை கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை சீரமைக்கலாம்.
விவசாயிகள் ஒருங்கிணைந்தால் ஏற்றம் தான்
கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர், கொட்டாம்பட்டி வட்டார வயலக கூட்டமைப்பு, மதுரை: மதுரையில் உள்ள 2435 கண்மாய்களில் கொட்டாம்பட்டியில் மட்டும் 961 கண்மாய்கள் உள்ளன. இங்கு 95 சதவீதம் பஞ்சாயத்து யூனியன் கண்மாய்கள் தான். ஆயிரக்கணக்கான சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து மக்கள் அமைப்பாக செயல்பட்டு 300 கண்மாய்களை பராமரித்து வருகிறோம்.
பெரு நிறுவனங்களின் (சி.எஸ்.ஆர்.) 75 சதவீத நிதி, விவசாயிகளின் 25 சதவீத பங்களிப்புடன் இணைந்து கண்மாய்களை சீரமைக்கிறோம். 150 கண்மாய் சங்கங்களில் வைப்புநிதி சேமிப்புடன் விவசாயிகள் செயல்படுகின்றனர்.குடிநீர், கால்நடைகளுக்காக 15 ஊருணிகளை பராமரிக்கிறோம். இங்கே நீராதாரம் தான் விவசாயிகளின் வாழ்வதாரம். அதற்காக இயற்கையோடு ஒன்றி பாதுகாத்து பராமரிக்கின்றனர்.எங்கள் கூட்டமைப்பிற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மதுரை கிரீன் சாம்பியன் விருது தற்போது கிடைத்தது. விவசாயிகள் ஒருங்கிணைந்தால் நீராதாரங்களை பாதுகாக்க முடியும்.
வருமானத்தில் ஒருபகுதி மரங்களுக்கு
துரைராஜ், சிற்ப, கட்டடக்கலைஞர், மதுரை: 2003ல் நத்தம் பகுதியில் கட்டுமான பணியில் இருந்தபோது பெருமழையால் அங்கிருந்த ஆலமரம் வேருடன் சாய்ந்தது. விழுதுகள் தரையைத் தொடவில்லை. மரம் விழுந்ததால் நுாற்றுக்கணக்கான பறவைகள் புகலிடமின்றி கீச் கீச் என கத்தியது மனதை பாதித்தது. அப்போதிருந்து எனது விடுமுறையை மரங்களுக்காக செலவிடுகிறேன்.
மதுரை, திருப்பரங்குன்றம் பகுதிகளில் காலை 6:00 முதல் 8:30 மணி வரை மரக்கன்று நடுவது, சீசனுக்கு ஏற்ப நாவல், வேம்பு விதை சேகரிப்பது, தண்ணீர் விடுவது என செயல்படுகிறேன். திருப்பரங்குன்றத்தை சுற்றி 1000 கன்றுகள் இப்போது பெருமரங்களாக நிழல் தருகின்றன. சுற்றுச்சூழல் பூங்கா முழுவதும் மரம் நட்டுள்ளேன். யானைக்குழாய், பூங்காவிலிருந்து தண்ணீர் பிடித்து 400 மரக்கன்றுகளுக்கு மோட்டார் டிரைசைக்கிளில் டாங்க் வைத்து தண்ணீர் ஊற்றுகிறேன்.
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வடிவேல்கரை பஞ்சாயத்தில் நடக்கும் நர்சரிக்கு விதைகளை கொடுப்பேன்.வருமானத்தில் ஒரு பகுதியை மரக்கன்று வாங்க, தண்ணீருக்கு செலவழிக்கிறேன். தனிநபர் சாதனைக்காக 'மதுரை கிரீன் சாம்பியன் விருது' கிடைத்தது. எதிர்பார்ப்பின்றி நாம் உதவினால் மரங்களும் எதிர்பார்ப்பின்றி நமக்கு காற்றும் நிழலும் அள்ளித்தரும். இதை புரிந்து கொள்வதற்கு பெரிய அறிவு தேவையில்லை.