வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஊழல் புகார் தெரிவித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னையில் நிருபர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறும் போது, கர்ப்பணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கு பொருட்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்துள்ளது. அரசுக்கு 77 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. டெண்டரை இறுதி செய்வதில் தனிநபர் இருவரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எப்படி அனுமதித்தார். இதற்கு அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் எனக்கூறியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சுப்பிரமணியன் கூறியதாவது: டெண்டர் விடுவதற்கு முன்பு முறைகேடு நடந்துள்ளதாக அண்ணாமலை கூறுகிறார். 2 நாட்களுக்கு பின்னர் தான் டெண்டர் விடப்பட உள்ளது. அதற்குள் நஷ்டம் என அண்ணாமலை கூறுகிறார். டெண்டர் பணிகள் முடியும் முன்பே, ஊழல் புகார் கூறுவதை ஏற்க முடியாது. இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை. யூகத்தின் அடிப்படையில் குற்றம்சாட்டியுள்ளார். அண்ணாமலை அறிவுப்பூர்வமாக புகார் வைப்பார் என நினைத்தேன். ஆனால், ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.