வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருநெல்வேலி: திமுக.,வின் ஊழல்களை பொறுக்கி, வன்முறையை பொறுக்கி எடுத்துவந்து மக்கள் மன்றத்தில் கொடுப்பதால் நான் பொறுக்கி தான் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
திருநெல்வேலியில் பா.ஜ., சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது: கொடியவர்களின் கூடாரமாக, மக்களிடம் இருந்து கொள்ளையடிப்பவராகவும், ஊழலை வைத்து சம்பாதிக்கும் அரசியல்வாதியாக திமுக மாறியிருக்கிறது. இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான 8 ஆண்டுகால ஆட்சியில் ஒரு மத்திய அமைச்சர்கள் ஒருவர் மீது கூட ஊழல் புகார் கூற முடியவில்லை.
ஆனால் தமிழகத்தில் ஒரே ஆண்டில் திமுக செய்துள்ள சாதனை ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறி உள்ளது. திமுக.,வைப் பொறுத்தவரை கண்ணுக்குத் தெரியாத விஷயத்தில் தான் ஊழல் செய்வார்கள்.

தமிழகத்தில் ஓராண்டு உருப்படியான ஆட்சி நடத்த தெரியாதவருக்கு இந்தியாவின் துணை பிரதமராக வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஒரு விஷயத்தை உருப்படியாக செய்ய முடியாத கையாலாகாத திமுக அரசு, பா.ஜ., அரசுடன் போட்டியிடுவது என்பது எலிக்கும் யானைக்கும் இடையேயான போட்டியாகும். 2024 லோக்சபா தேர்தலில் முழுமையாக 25 எம்பி.,க்களை டில்லிக்கு அனுப்பி வைத்தால், 5 அமைச்சர்களை பெறலாம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

அண்ணாமலை யார் என்றால் பெரிய பொறுக்கி என திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். உண்மையாகவே அமைச்சர் கூறிய வார்த்தையை ஏற்றுக்கொள்கிறேன். நான் ஒரு பொறுக்கி தான், ஆனால் எப்படிப்பட்ட பொறுக்கி என்றால், திமுக.,வின் ஊழல்களை பொறுக்கி, வன்முறையை பொறுக்கி, திமுக.,வின் அராஜகத்தை பொறுக்கி சாதாரண மனிதனாக பொறுக்கி எடுத்துவந்து மக்கள் மன்றத்தில் கொடுக்கும் பொறுக்கி. அதற்காக எனக்கு பொறுக்கி என்ற பட்டத்தை கொடுத்தீர்கள் என்றால் நல்ல மனத்தோடு கம்பீரமாக ஏற்றுக் கொள்வேன். இவ்வாறு அவர் பேசினார்.