தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறித்து பணியாளர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் உண்டு. அதில் முக்கியமானது வேலையை விட்ட பின்னரும் தனது ஈ.பி.எப்., கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி பணம் சேருமா என்பது. அது பற்றி பார்ப்போம்.
தனியார் பணியாளர்களுக்கான அரசின் சிறப்பான சமூகப் பாதுகாப்பு திட்டங்களில் ஒன்று தான் வருங்கால வைப்பு நிதி திட்டம். இதில் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றின் மொத்த மதிப்பிலிருந்து 12% ஊழியர் சார்பாக ஈ.பி.எப்., கணக்கிற்கு செல்லும், நிறுவனம் சார்பில் 3.67% ஈ.பி.எப்.,க்கும், 8.33% ஈ.பி.எஸ்., எனும் பென்சன் கணக்கிற்கும் செல்லும். இதுவே ஒருவரின் அடிப்படைச் சம்பளம் 15 ஆயிரத்திற்கும் மேல் என்றால் நிறுவனத்தின் சார்பில் 8.33 சதவீத தொகைக்கு பதில் ரூ.1,250 பென்சன் திட்டத்திற்கும், பாக்கித் தொகை ஈ.பி.எப்., கணக்கிற்கும் செல்லும்.

நமது பங்கிற்கு இணையான தொகையை நிறுவனமும் செலுத்துவதால் நீண்டகாலத்தில் பார்க்கும் போது அதிக பணம் நம் கணக்கில் சேர்ந்திருக்கும். தற்போது உள்ள சேமிப்பு திட்டங்களிலேயே ரிஸ்க் இன்றி அதிக வட்டி தரக்கூடியது அரசின் இ.பி.எப்., திட்டம் மட்டுமே. 2022 நிலவரப்படி 8.1% வட்டி வழங்கப்படுகிறது. ஒருவர் பணியிலிருந்து விலகி தொழில் தொடங்கிவிட்டால் ஆண்டுதோறும் இந்த 8 சதவீத வட்டித்தொகை வரவு வைக்கப்படுமா என்பது பலரது கேள்வி.
ஈ.பி.எப்., விதிகளை நன்கு அறிந்த நிபுணர்கள் இதற்கு ஆம் வட்டி பெற முடியும் என்கின்றனர். பணியிலிருந்து ஒருவர் விலகி, அவரது ஈ.பி.எப்., கணக்கில் பங்களிப்பு இல்லாமல் போனாலும் ஓய்வு வயதான 58 வயது வரை வட்டி வரவு வைக்கப்படும். அதற்கு அவரது கணக்கு செயலற்று போகாமல் இருக்க வேண்டும். நான்கு விஷயங்களால் ஒருவரது ஈ.பி.எப்., கணக்கை செயலற்றது என அறிவிப்பர்.

1.) 55 வயதுக்கு பின்னர் பணியாளர் ஓய்வு பெறும் போது
2.) சந்தாதார் நிரந்தரமாக வெளிநாடு சென்றுவிட்டால்
3.) சந்தாதாரர் இறந்துபோனால்
4.) பணியிலிருந்து விலகிய பின்னர் 36 மாதங்களுக்குள் ஈ.பி.எப்., தொகையிலிருந்து சிறு பகுதியையாவது க்ளைம் செய்ய வேண்டும். அப்படி இல்லை எனில் கணக்கு செயலற்றதாக அறிவிக்கப்படும்.
அதன்படி ஒருவர் பணியிலிருந்து விலகிய பின்னரும் தொடர்ந்து ஈ.பி.எப்.,ல் வட்டியை பெற குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறு தொகையை எடுக்க வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பணி விலகிய பிறகு அல்லது ஓய்வுக்கு பிறகு சேரும் ஈ.பி.எப்., வட்டிக்கு 10% வருமான வரி பிடித்தம் உண்டு. அதே போல் பணியில் சேர்ந்த 5 ஆண்டுகளுக்குள் பணத்தை எடுத்தாலும் வட்டிக்கு 10% வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.