மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஈடுபட விரும்புவோர் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் குறித்துப் பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டும் ஆர்வம் நம்மில் பலருக்குண்டு. ஆனால் நடுத்தர வர்க்க மக்கள் பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட ஆபத்தான முதலீட்டில் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் என நமது நலன்விரும்பிகள், உறவினர்கள், ஏற்கனவே இவற்றில் நஷ்டத்தை சந்தித்தவர்கள் எச்சரிக்கை விடுப்பதை புறக்கணிக்க முடியாமல் தவிப்போம்.

ஆனால் நீண்டகால முதலீட்டுத் திட்டங்களில் சிக்கி பல ஆண்டுகள் காத்திருந்து லாபம் பெறுவதற்கு பதில் சரியான நேரத்தில், சரியான நிறுவனத்தில் மியூச்சுவல் ஃபண்ட் மூதலீடு செய்தால் குறைந்த காலத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும். இதற்கு பல ஆண்டு கால ஆய்வு தேவை. மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேரும் முன்னர் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷ்யங்கள் குறித்துப் பார்ப்போம்.
நிறுவனத்தின் தரம்
இன்று நாடு முழுவதும் செபியால் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றன. எந்த நிறுவனத்தை தேர்வு செய்வது என குழம்பும் வகையில் இவர்களது விளம்பரங்கள் தொலைக்காட்சி, ரேடியோ, யூடியூப் என நிரம்பி வழிகின்றன. நிறுவங்களில் தரத்தை அதன் கூகுள் ரெவ்யூக்களில் இருந்து தெரிந்துகொள்ளலாம். இதனை தெரிந்துகொள்ள தினமும் ஒரு மணி நேரத்தை ஒதுக்குவது நல்லது. பின்னர் நம்பகமாக நிறுவனத்தை தேர்வு செய்யலாம்.

நிதி மேலாளரின் பணி அனுபவம்
சரியான பங்குகளில் உங்களது பணத்தை முதலீடு செய்து லாபத்தை பெற நிதி மேலாளர்கள் தொழில் அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும். நிதி மேலாளர்களது அனுபவம், பணித்திறமை, அவர் முன்னர் பணிபுரிந்த நிறுவனங்கள், அவரது தொழில் சாதனைகள் உள்ளிட்டவற்றை இணையத்தில் தேடி தெரிந்துகொள்வது அவசியம்.
செயலியின் தரம்
இன்று மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை நமது கைக்குள் அடங்கும் ஸ்மார்ட் போனில் இருந்து இயக்க முடியும். இதற்கு பல செயலிகள் பிளே ஸ்டோரில் குவிந்து கிடக்கின்றன. ஆனால் செயலியின் தரத்தை வாடிக்கையாளர்களது ரேட்டிங் கொண்டு சோதித்து அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது நல்லது.
செலவு விகிதம்
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குகளில் இருந்து வரும் லாபத்தில் குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொள்ளும். இதில் நிதி மேலாளரும் தனது சேவைக்கான தொகையை எடுத்துக்கொள்வார். செலவு விகிதம் குறித்து தெளிவாக தெரிந்துகொண்டு முதலீடு செய்யவேண்டும். நீங்கள் முதலீடு செய்யும் பணத்தில் நிறுவங்கள் எடுத்துக்கொள்ளும் தொகை குறித்து ஆராயவேண்டும். இது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலீட்டுத் தொகை குறித்த ஆய்வு
பங்கு நிதி, துறைசார் நிதி, குறியீட்டு நிதி என எதில் முதலீடு செய்தாலும் நீங்கள் மாதாமாதம் செலுத்தும் மாதம் செலுத்தவேண்டிய தொகையின் அளவை ஒருமுறைக்கு இருமுறை திட்டமிட வேண்டும். திட்டத்தில் கால அவகாசம் நிறைவடையும் வரை உங்களால் இந்த தொகையை கட்ட முடியுமா என சிந்தித்து முதலீடு செய்வது நல்லது.