'மலைகளின் அரசன் சேர்வராயன்' எனப் போற்றப்படும் சுற்றுலாப் பிரதேசம் கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஏற்காடு. சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏற்காடு, அனைத்து நடுத்தர மக்களின் ஆதர்ச வார இறுதி பொழுதுபோக்குத் தளமாக விளங்குகிறது. அதிக செலவில்லாத சுற்றுலாத் தலமாக விளங்கும் ஏற்காட்டை 'ஏழைகளின் ஊட்டி' என்று அழைப்பர். ஏற்காடு சென்றால் காணவேண்டிய முக்கியமான பொழுதுபோக்கு இடங்கள் குறித்துப் பார்ப்போம்.
ஏற்காட்டின் பிரபல உணவுகள்
ஏற்காட்டில் முதல்தர சாக்லேட்கள், டீ தூள், பெரிய கல் மீன் கறி கிடைக்கும். இதுதவிர ஊட்டியில் கிடைப்பதுபோல சுட்ட சோளம், கடலை, மாங்காய், கேரட் காரக் கலவை, இனிப்பு சோளம் உள்ளிட்டவையும் கிடைக்கும். இதுதவிர இங்கு கிடைக்கும் ஆலிவ் எண்ணெய், யூகலிப்டஸ் தைலம், 'ரோல் ஆன்' வாசனை திரவியங்களை வாங்கிச் செல்ல பல ஊர்களில் இருந்து கூட்டம் அலைமோதும்.

சேர்வராயன் கோவில்
இது ஏற்காட்டின் பழமையான சிறிய குகைக் கோவில். இங்கு மலையை குடைந்து கோவில் கருவறை கட்டப்பட்டு இருக்கும். கோவில் உள்ளே விளக்கு வெளிச்சம் மட்டுமே பிரகாசிக்கும். ஆண்டுதோறும் மே மாத்த்தில் இங்கு நடைபெறும் திருவிழா பிரபலமானது. மிக சக்திவாய்ந்த கடவுளாக இப்பகுதி மக்களால் பார்க்கப்படும் தெய்வம் சேர்வராயன்.
பெரிய ஏரி
பெரிய ஏரி 50 அடி அழம் கொண்டது. இதைச்சுற்றிலும், மான்பூங்கா, பொழுதுபோக்கு பூங்கா, அண்ணாபூங்கா ஆகியவை அமைந்துள்ளன. இங்கு படகு சவாரி மிகப் பிரபலம்.
அண்ணா பூங்கா
அண்ணா பூங்கா பெரிய ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. இதில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் கோடை விழாவின்போது மலர்கண்காட்சி நடைபெறும். இதனைக் காண பல ஊர்களில் இருந்து மக்கள் வருகை தருவர்.
தாவரவியல் பூங்கா
இந்திய தாவரவியல் கழகம் நிர்வகிக்கும் தாவரவியல் பூங்காவில் பல அரிய தாவரங்கள் பராமரிக்கப்படுகின்றன.
கிள்ளியூர் நீர்வீழ்ச்சி
ஏற்காட்டிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கிள்ளியூர் நீர்வீழ்ச்சி ஏரியிலிருந்து வழிந்தோடும் நீர் இங்கு நீர்வீழ்ச்சியாக விழுகிறது. இதில் குளிக்க பலர் ஆர்வம் காட்டுவர்.
லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட்
இங்கு பிரம்மாண்ட பாறைகள் இயற்கையாகவே அமைந்துள்ளன. இங்கிருந்து பார்த்தால் குளிர்காற்றின் மெல்லிய அலையோசையின் பின்னணியில் சேலம் நகரமே பிரமாண்டமாகக் காட்சியளிக்கும்.
பகோடா காட்சி முனை
ஏற்காட்டின் கிழக்கு முனையில் அமைந்துள்ள இந்த காட்சிமுனை 'பிரமிட் பாயிண்ட்' எனவும் அழைக்கப்படும். இங்கு ராமர் கோவில் ஒன்றுள்ளது. இங்கிருந்து அயோத்தியாபட்டணம் பகுதிகளை கண்டுகளிக்கலாம். இது ஏற்காட்டிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. கோவிலை ஒட்டு பரந்த புல்வெளி உள்ளது. சுற்றுலா பயணிகள் இங்கு மதிய உணவருந்துவது வாடிக்கை.

பட்டு உற்பத்தி பண்ணை
பட்டுப் பண்ணையில் மெல்பெரி செடிகள் வளர்க்கப்படுகின்றன. இங்கு பட்டு பூச்சி வளர்ப்பையும், அதிலிருந்து பட்டு நூல் தயாரிப்பையும் காணலாம்.
ரோஜாத் தோட்டம்
ரோஜாத் தோட்டத்தில் கண்களைக் கவரும் பல வண்ண ரோஜா மலர்கள் வளர்க்கப்படுகின்றன. இங்கு ரோஜா செடிகள் விற்கப்படுகின்றன. இவற்றை சுற்றுலா பயணிகள் வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டுவர்.