சென்னை : தமிழகத்தில், ஒன்பதாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைவரும், 'ஆல் பாஸ்' செய்யப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக, அரசு பள்ளிகளில் பாடங்கள் நடத்துவதில்தாமதம் ஏற்பட்டதால், இந்த ஆண்டு மட்டும், இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த, 2020- - 21ம் கல்வி ஆண்டில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் நடத்தாமல் 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டன. ஆனால், தற்போது முடிந்துள்ள, 2021 - -22ம் கல்வி ஆண்டில், கொரோனா பரவல் குறைந்ததால், செப்டம்பர் முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.
13ல் பள்ளிகள் திறப்பு
இதையடுத்து, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, திட்டமிட்டபடி பொது தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கு, ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தி, மே 13 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. மீண்டும் வரும், 13ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.இந்நிலையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தேர்வு முடிவுகளை அறிவிக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதில், ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும், அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதாவது, எட்டாம் வகுப்பு மட்டுமின்றி, ஒன்பதாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களும் 'ஆல் பாஸ்' செய்யப்பட்டு, 10ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும், இந்தாண்டு, ஆல் பாஸ் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஐந்து முதல் 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, இலவச கல்வி வழங்குவதுடன், அவர்களை இடைநிறுத்தல் இன்றி, அடுத்த வகுப்புகளுக்கு 'ஆல் பாஸ்' செய்யும் நடவடிக்கை, ஏற்கனவே அமலில் உள்ளது.
இதன்படி, எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், அடுத்த வகுப்புகளுக்கு, ஆல் பாஸ் செய்யப்படுவது வழக்கம்.
இல்லம் தேடிகல்வி
அதேபோல், இந்த முறை, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களும் முழுமையாக, ஆல் பாஸ் செய்யப்பட்டுள்ளனர்.கடந்த கல்வி ஆண்டில் கொரோனா தொற்றால், பாடங்கள் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், பாடம் நடத்தும் முக்கிய மாதங்களில், அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
அதேபோல், 'எமிஸ் டிஜிட்டல்' தளத்தில் பதிவுப் பணிகள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டப் பணிகள் போன்றவற்றிலும், ஆசிரியர்கள் அதிக நேரம் செலவிட வேண்டி இருந்தது. இதனால், மாணவர்களுக்கு பாடம் நடத்துவது பாதிக்கப்பட்டது.இந்த நிர்வாக நடவடிக்கைகளால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதால், ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள், 10ம் வகுப்புக்கு ஆல் பாஸ் செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாள் கூட பள்ளிக்கு வராமல் இருந்தவர்களும், தேர்வு எழுதாதவர்களும், ஆல் பாஸ் பட்டியலில் இடம்பெற மாட்டார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.