சென்னை : அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மழலையர் வகுப்புகளுக்கு மூடு விழா நடத்த, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மழலையர் வகுப்புகளில் பாடம் நடத்திய ஆசிரியர்கள் அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கல்வி ஆண்டில், மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தும்படி, அரசு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், 2018ல், அ.தி.மு.க., ஆட்சியின் போது, தொடக்க பள்ளிகளையும், அங்கன்வாடிகளையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதாவது, அரசு பள்ளிகளுடன் இணைந்து செயல்படும் அங்கன்வாடிகளில் படிக்கும் மாணவர்களை, அரசு பள்ளிகளின், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்பில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, 2,400 அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் துவக்கப்பட்டன. இதில், 2019- - 20ம் கல்வி ஆண்டில், 60 ஆயிரம் குழந்தைகள் சேர்ந்து படித்தனர்.
இந்நிலையில், கொரோனா பிரச்னையால் பள்ளிகள் மூடப்பட்டதால், எல்.கே.ஜி., சேர்க்கை நிறுத்தப்பட்டது.
தயக்கம்
எல்.கே.ஜி., வகுப்புகள் உள்ள, அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களில் பலர், வயது அதிகமாகி விட்டதால், எல்.கே.ஜி., வகுப்புகள் எடுக்க தயங்கினர். தங்களை மீண்டும் தொடக்கப் பள்ளிகளுக்கு மாற்ற கோரிக்கை விடுத்தனர். இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் வழியாக, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலினிடம், சட்டசபை தேர்தலுக்கு முன் மனு அளித்தனர். மேலும், தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக, 'வாட்ஸ் ஆப்' பிரசாரங்களிலும் சிலர் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தி.மு.க., அரசு அமைந்ததும், ஆளுங்கட்சியின் செல்வாக்கு பெற்ற அதிகாரி அறிவொளி, தொடக்கப் பள்ளி துறை இயக்குனர் பதவிக்கு வந்தார்.அவர் எடுத்த அவசர நடவடிக்கையில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள், கூண்டோடு அரசு தொடக்க பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர்; அதுவும், அவர்கள் விரும்பிய பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர்.இதனால், எல்.கே.ஜி., பாடம் எடுக்க ஆசிரியர் இல்லாத நிலை, பள்ளிகளில் ஏற்பட்டது.
இந்நிலையில், ஒட்டுமொத்தமாக எல்.கே.ஜி., மழலையர் வகுப்புகளை, நடப்பு கல்வி ஆண்டில், தமிழக பள்ளிக் கல்வி துறை முழுமையாக மூட முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டுக்கு, ஒன்றாம் வகுப்பு முதல் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்துமாறு, கடந்த வாரம் நடந்த ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் கூட்டத்தில், இயக்குனர் அறிவொளி அறிவுறுத்தினார். இதையடுத்து, கிராமங்களிலும் ஆங்கில வழி படிப்பு கிடைக்க வழி செய்யும் அற்புதமான, அரசு பள்ளி எல்.கே.ஜி., வகுப்பு திட்டம் மூடு விழா காணும் அபாயத்தை நெருங்கியுள்ளது.
வரும், 13ம் தேதி புதிய மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு, பள்ளிக் கல்வி துறை திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், அ.தி. மு.க., ஆட்சிக் கால திட்டம் என்று பாராமல், கிராமப்புற குழந்தைகளை படிக்க வைக்கும் எல்.கே.ஜி., வகுப்புகளை, அரசு பள்ளிகளில் மீண்டும் துவக்க வேண்டும் என, பெற்றோரும், கல்வியாளர்களும் வலியுறுத்துகின்றனர்.
அமைச்சர் விளக்கம்
''எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் நிறுத்தப்படவில்லை,'' என்கிறார், பள்ளி கல்வித் துறை அமைச்சர்.
தஞ்சாவூரில், நேற்று அவர் அளித்த பேட்டி: அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் நிறுத்தப்படவில்லை. பள்ளி கல்வித் துறையின் கீழ் இருந்த எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையத்திற்கு மாற்றப்பட்டுஉள்ளன. அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்த்துக் கொள்ளலாம். இதில், பணியாற்றிய ஆசிரியர்கள், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கான பணியில், முழுமையாக ஈடுபடுத்தப்படுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
துவக்க கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: மழலையர் வகுப்புகளில் உள்ள குழந்தைகளை கையாள்வதில் சிக்கல் புரிதலின்மையே நீடித்தது. எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை கையாள நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 2013 -14க்கு பின் ஆசிரியர்களை புதிதாக நியமிக்காததால், ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புகளை கையாள அதிக ஆசிரியர்கள் தேவைப்படுவதால், அவர்கள் துவக்க பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அங்கன்வாடி மையங்களில் ஏற்கனவே இருந்த குழந்தைகளுக்கு முந்தைய நடைமுறையை பின்பற்றி இந்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் அங்கன்வாடி உதவியாளர்கள் மூலம் தற்காலிக கற்றல் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.