வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: வீட்டு வசதித்துறை ஒப்பந்தங்களில் முறைகேடு இல்லை எனவும், ஒற்றை சாளர முறைப்படி ஒப்பந்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 5) அன்று நிருபர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறுகையில், 'ஜி ஸ்கொயர்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை முன்னேற்றும் நிறுவனமாக, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., மாறிவிட்டது, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இணையதளம் வாயிலாக மட்டுமே, சி.எம்.டி.ஏ., அனுமதி வழங்கப்படும் என, அரசாணை வெளியிடப்பட்டது. இதனால், சி.எம்.டி.ஏ., ஒப்புதலுக்கு, ஜி ஸ்கொயர் விண்ணப்பிக்கும் ஒரு மணி நேரம் மட்டும் தான், 'ஆன்லைன் லிங்க்' கிடைக்கும். மற்றவர்கள் விண்ணப்பிக்கும் போது இணைப்பு கிடைப்பதில்லை.இதனால், சிறிய நிறுவனங்கள், பாரம்பரிய நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்க, எதற்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் என்பது குறித்து, அமைச்சர் முத்துசாமி பதில் தர வேண்டும் எனக்கூறியிருந்தார்.
இது தொடர்பாக அமைச்சர் முத்துசாமி அளித்த பேட்டி:
வீட்டு வசதித்துறையில் ஒற்றை சாளர முறைப்படி ஒப்பந்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களில் பணிகள் முடிந்தவுடன் ஒற்றை சாளர முறை மூலமே அனைத்திற்கும் அனுமதி வழங்கப்படும். வீட்டு வசதித்துறை ஒப்பந்தங்களில் முறைகேடு இல்லை. ஒற்றை சாளர முறையை முழுமையாக கொண்டுவர ஓராண்டுகாலம் ஆகியுள்ளது.

10ம் தேதி முதல் ஆன்லைனில் கட்டட அனுமதி பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அடுக்குமாடி கட்டடத்திற்கு அமைச்சர் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிகாரிகளே முடிவு செய்து அனுமதி வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கோவையில் ஜி ஸ்கொயர் விவகாரத்தில் எந்த விதிமீறலும் இல்லை.112 ஏக்கரில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு அனைத்து அனுமதிகளும் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்டவை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.