உலக,நாடு,தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
என்.கந்தசாமி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., அளித்த வாக்குறுதிகளில், 'மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் தருவோம்' என்ற வாக்குறுதியை தவிர, மற்ற வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி விட்டோம்' என்று அடித்துச் சொல்லியிருக்கிறார் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி.

இவரின் பேச்சை பார்த்தால், நல்ல மனநிலையில் தான் இதைச் சொன்னாரா என்ற, 'டவுட்' மக்களுக்கு எழுகிறது. 'தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்' என்று, முதல்வர் ஸ்டாலினே சொல்லாத போது, ஐ.பெரியசாமி மட்டும், எப்படி துணிச்சலாக சொன்னார் என்பது, நமக்கு சத்தியமாக விளங்கவில்லை. 'பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம்' என்றனர்; அது, சாத்தியம் இல்லை என்று மறுத்து விட்டார், நிதி அமைச்சர் தியாகராஜன்.
'பழைய ஓய்வு ஊதியத் திட்டத்தை அமல்படுத்துவோம்' என்று வாக்குறுதி தந்தனர்; அதற்கும் வாய்ப்பில்லை' என்கிறார் அதே நிதி அமைச்சர். 'நீட்' தேர்வு விலக்கு மசோதாவுக்கு, இன்னும் ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவில்லை; அதுவும் சாத்தியமாக போவதில்லை என்பது தெரிந்து விட்டது. இப்படி சொல்லியபடியே போகலாம்... 'தேர்தல் வாக்குறுதிகளை, மக்கள் மறந்து போனாலும், நாங்கள் மறக்காமல் நிறைவேற்றுவோம்' என்று தான் முதல்வர்சொன்னாரே தவிர, அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக சொல்லவில்லையே?

தெருவுக்கு தெரு தலைவர் கருணாநிதியின் திருநாமத்தை வைப்பதிலும், அவருக்கு வெண்கலத்தில், கருங்கல்லில் சிலைகள் வைப்பதிலும் தான், முதல்வரின் கவனம் இருக்கிறதே தவிர, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது பற்றி, அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை. கருணாநிதியின் நீடித்த புகழுக்கு என்ன காரணம் என்று பட்டிமன்றம் நடத்தி, அதில் பேரின்பம் காண்கிறார் ஸ்டாலின். அத்துடன், தன் தந்தையின், 100வது பிறந்த நாளை எப்படி தடபுடலாக பிரமாண்டமாகக் கொண்டாடுவது என்ற சிந்தனையிலும் இப்போதே ஆழ்ந்து விட்டார்.
இந்த லட்சணத்தில், உதயநிதியை எப்படியும் அமைச்சராக்கியே தீருவோம் என்று, சில மாவட்ட செயலர்கள் கங்கணம் கட்டி தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். போகிற போக்கை பார்த்தால், உ.பி.,யில்அம்மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி செய்ததை போல, தமிழகம் முழுதும் உள்ள நகரங்களில், விரைவில் மெகா பூங்காக்கள் அமைத்து, அங்கெல்லாம் கருணாநிதியின் புகழ் பரப்பும் வகையில், அவரின் சிலைகளையும், உதயசூரியன் சின்னத்தையும் பெரிய அளவில் அமைக்க திட்டமிடுவாரே அன்றி, கொடுத்த வாக்கை நிச்சயம் ஸ்டாலின் காப்பாற்றப் போவதில்லை என்பதே நிதர்சனம். பாவம் மக்கள்... 'அது எப்போது நிறைவேறும்; இது எப்போது நிறைவேறும்' என, தி.மு.க., வாக்குறுதிகளை நினைத்து, நான்கு ஆண்டிற்கு ஏமாந்த சோணகிரிகளாக ஏங்கித் தவிப்பதை தவிர வேறு வழியில்லை.