சென்னை, சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில், முதல் முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து, நீதிமன்ற அறைக்கு வரும் போது, அவர்களுக்கு முன், 'தபேதார்' என்பவர் கையில் செங்கோலுடன் வருவது, காலம் காலமாக உள்ள வழக்கம். நீதிபதிகள் வரும் போது, முன்செல்லும் தபேதார்கள், வழியில் கூட்ட நெரிசல் இல்லாமல் வழி ஏற்படுத்தி தருவர்.
நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி எந்த பணியில் ஈடுபட்டாலும், அவர் செல்லும் போது இந்த தபேதார், நீதிபதிக்கு முன் செல்வது வழக்கம். இந்த தபேதார் பணியில், இதுவரை ஆண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றிலேயே, முதல் முறையாக திலானி என்ற பெண் தபேதாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த சென்னை உயர் நீதிமன்ற பணியாளர்கள் நியமனத்தில், இவர் தேர்வு செய்யப்பட்டு, தற்போது தபேதாராக, நீதிபதி மஞ்சுளாவிடம் பணிபுரிந்து
வருகிறார்.
ஏற்கனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் வாகனங்கள் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு பணியில், பெண் ஓட்டுனர் ஒருவர் நியமிக்கப் பட்டுள்ளார். அந்த வரிசையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்து நிலைகளிலும்,
பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதாக, உயர் நீதிமன்ற பணியாளர்கள்
பெருமையுடன் கூறினர்.