
சென்னை வடபழநி ஆண்டவர் கோயில் சார்பில் நடைபெற்ற தேரோட்டத்தை அந்தப் பகுதி வாழ் மக்கள் தங்கள் இல்ல விழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதற்காக தேர் வரும் பாதையை தண்ணீர் விட்டு கழுவியவர்கள் பின் விதம் விதமாய் கோலமிட்டு அதில் மலர்துாவி தேரை வரவேற்றனர்.

அதே போல தேர் இழுத்துவரும் பக்தர்களுக்காகவும், தேரோட்டம் காணவந்த பக்தர்களுக்காகவும் மோர்,பானகம்,சுண்டல்,பொங்கல் என்று இலவசமாக வழங்கி மகிழ்ந்தனர்.

வெயிலைப் பொருட்படுத்தாது கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், தேர் முன்பாக செருப்பணியாத காலுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்தே சென்று தேரோட்டத்தை உற்சாகப்படுத்தினார்.

தேருக்கு முன்பாக பல்வேறு வாத்தியங்கள் வாசிக்கப்பட்டது அதில் சென்டை வாத்தியம் வாசித்தவர்களின் வாசிப்பு பாராட்டும்படியாக இருந்தது மிகவும் லயித்து ரசித்து வாசித்தனர்.

வள்ளி,தெய்வானை சமேதரராய் தேரில் எழுந்தருளிய உற்சவரான சுப்பிரமணியசுவாமியை கண்ட பக்தர்கள் பலர் கண்களில் ஆனந்தக்கண்ணீர், அதே போல இருகை நீட்டி ‛முருகா முருகா' என்று வரவேற்ற பக்தர்களையும் ஆங்காங்கே பார்க்கமுடிந்தது.
கோவில் திருவிழா பக்தர்களால் பெருவிழாவாக மாற்றப்பட்ட மகிழ்ச்சி எங்கும் நிறைந்திருந்தது.
-எல்.முருகராஜ்.