'கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே
விரதம் இருந்து பார்த்த சாரதியின் மைந்தனே உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து...'தெய்வீகமான காந்தக்குரல் காற்றில் அலைந்து செவிகளை அடைந்தது. என்பது வயதான அந்த பெரியவர், தன்னையும் அறியாமல், இணைந்து பாடுகிறார்.அந்தளவுக்கு சாகாவரம் பெற்ற பல பாடல்களில், 'பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...' பாடலும் ஒன்று. கார்த்திகை, மார்கழி மாதம் மட்டுமல்லாமல், எந்த நேரத்திலும் இந்த பாடல் ஒலித்தால், பக்தர்களின் மனங்களில் பக்தி பிரவாகமெடுக்கும்.
அனைவரிடமும் இரண்டற கலந்து விட்ட இந்தப்பாடல், காலஞ்சென்ற வீரமணியால் பாடப்பெற்று, இன்றளவும் உயிர்ப்போடு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், அவரது சிஷ்யராக வலம் வரும் வீரமணி ராஜூ.ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளை தாண்டி, வீரமணி பாடிய ஐயப்ப சுவாமி பாடல்கள் இன்றளவும் உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணமாகவும் விளங்கி வருகிறார்.திருப்பூர் ஈஸ்வரன் கோவில் தேர்த்திருவிழா கலை நிகழ்ச்சிக்காக வந்த அவரை சந்தித்தோம்....
உங்களது இசைப்பயணம் குறித்து...
ஏழு வயதில் துவங்கிய இந்த பயணம் இன்றளவும் செல்கிறது. அப்பாவுடன் பாடி வந்த நான், சித்தப்பா வீரமணியுடன் பாட ஆரம்பித்தேன். மேடைகளில், என் மகன் என என்னை அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தார். எல்லா பாடல்களையும் எப்படி பாட வேண்டும் என பயிற்சி, ஊக்கம் அளித்தார். அவர் அளித்த அந்த வலுவான அடித்தளம், இன்றளவும் என்னை பாட வைக்கிறது.
முதன்முறையாகமேடை அனுபவம்?
சென்னை, மயிலாப்பூர் - லஸ் கார்னரில் உள்ள நவசக்தி விநாயகர் கோவிலில் அரங்கேற்றம். அப்போது, எம்.எஸ்.விஸ்வநாதன் நிகழ்ச்சிக்கு வந்தார். நான் பாடியதை பார்த்து, அடுத்த கச்சேரியில் அவர் இசையில் பாட வாய்ப்பளித்தார். எம்.எஸ்.வி.,யின் இசை கச்சேரியில், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.எஸ்., எஸ்.பி.பி., சுசீலா போன்ற ஜாம்பவான்கள் முன்னிலையில் பாடி பாராட்டு பெற்றதை மறக்க முடியாது. அப்போது கிடைத்த அங்கீகாரம், வாழ்த்து என்னை வாழ வைக்கிறது.
காஞ்சி பெரியவரின்சந்திப்பு பற்றி...
கோவை, ஆர்.எஸ்.புரம், காமாட்சியம்மன் கோவிலில், சித்தப்பாவுடன் பாட சென்றிருந்தேன். காஞ்சி மஹா பெரியவா வந்து ஆசீர்வதித்தார். அப்போது, அவர் பாதத்தை நான் தொட்டு விடவே, அருகிலிருந்தோர் கடிந்தனர். அதனை கவனித்த பெரியவா, 'தொட்டால் என்ன, சின்ன குழந்த அவன்...' என்றவாறு தனது இரு கால்களையும் நீட்டி, 'நன்னா தொட்டுக்கடா...' என்றார். அவரது கால்களில் சங்கு, சக்கரம் இருந்ததை பார்த்தேன், புரியவில்லை. வீட்டுக்கு வந்து சித்தப்பாவிடம் சொன்னதற்கு, 'நீ பெரிய புண்ணியவான், அவரது அனுக்ரஹம் உனக்கு கிடைத்து விட்டது,' என்றார். இதுவரை எவ்வளவோ, பொன்னாடைகள் கிடைத்தாலும், அன்றைய தினம் காஞ்சி மஹா பெரியவா, அளித்த சால்வையை இன்றளவும் பாதுகாத்து வருகிறேன், பெரிய பாக்கியமாகவும் கருதுகிறேன்.
உங்களுக்கு பிடித்தமானஐயப்பன் பாடல்...
வேறென்ன... 'பள்ளிக்கட்டு' பாடல் தான். அது எனது பிறவிப்பயன் என்றே சொல்லலாம். அவர் ஒரு சித்தர் என்றே சொல்வேன். நம்மிடையே வாழ்ந்து கொண்டு அனைவருக்கும் கேட்ட வரம் தருகிறார். தமிழகம் மட்டுமல்ல... எந்த வெளிநாடு சென்றாலும், 'பள்ளிக் கட்டு... சபரிமலைக்கு' பாடலை மீண்டும் மீண்டும் பாட சொல்கின்றனர். அண்டைய மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவிலும், ஐயப்ப பக்தர்களிடம் இந்த பாடல் ஒலிக்காத நாளே இல்லை.
இசைத்துறையில்,அடுத்த தலைமுறை?
ஆமாம். எனது மகன் அபிேஷக், மென் பொறியாளர். துபாயில், கிடைத்த வேலையை உதறி விட்டு, என்னுடன் பயணிக்கிறார். பேரன் சாய் சமர்த்துக்கு ஐந்து வயதாகிறது. இப்போது, இரண்டு மூன்று பாடல் பாடுகிறார். தொடர்ந்து பல தலைமுறையாக ஐயப்பனை பாடி வருகிறோம். இது, ஆண்டவன் ஐயப்பன் இட்ட கட்டளை. எங்களால் மீற முடியாது. மீறவும் கூடாது.
சினிமா பக்கம் போகாதது ஏன்...
வாய்ப்புகள் வந்தன. நான் விரும்பவில்லை. அங்கு கிடைக்கும் பணம், புகழ் எல்லாவற்றுடன், சமுதாய அந்தஸ்து, பக்தி பாடல்கள் பாடுவதில் கிடைக்கிறது. பெரிய மனநிறைவு. அனைரும் இறை நாமம் சொல்லி, வழிபாடு செய்யுங்கள். கடவுள் கைவிட மாட்டார். என் இசைப்பணம் ஆத்ம திருப்தி தருகிறது. என்றும் மாறாதது பக்தி ஒன்று மட்டுமே.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE