வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பட்டிவீரன்பட்டி,--''நாடு சுதந்திரம் அடைந்து, 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை, எட்டு ஆண்டுகளிலேயே பிரதமர் நரேந்திர மோடி செய்து சாதனை நிகழ்த்தி உள்ளார்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் நடந்த பா.ஜ., சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:இந்தியா சுதந்திரம் அடைந்து, 70 ஆண்டுகளில், ஏழு கோடி பேருக்கு மட்டுமே வங்கிக் கணக்கு இருந்தது. அதை, 45 கோடி பேருக்கு உயர்த்தியவர் பிரதமர் நரேந்திர மோடி.எட்டாண்டு ஆட்சி காலத்தில், இரண்டரை கோடி பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார்.
மின்சாரம் இல்லாமல் இருந்த, 18 ஆயிரம் கிராமங்களுக்கு, பா.ஜ., ஆட்சிக்கு வந்த, ஆயிரம் நாட்களுக்குள் மின்சாரம் அளித்துள்ளார்.அண்டை நாடுகள் பயமுறுத்தும் நிலை மாறி, இந்தியாவை கண்டு அவை அஞ்சும் நிலையை மோடி உருவாக்கி உள்ளார். எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்படுகிறது.தி.மு.க., ஓராண்டு சாதனை என தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை.பொய் நாடகம் ஆடுபவர்களை நம்பாமல், பிரதமர் மோடியை நம்பினால், நம் நாடு உலக நாடுகளுக்கு சவால் விடும் அளவிற்கு முன்னேறும்.இவ்வாறு அவர் கூறினார்.