இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: ஒய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை| Dinamalar

இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: ஒய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை

Updated : ஜூன் 13, 2022 | Added : ஜூன் 13, 2022 | |
இந்திய நிகழ்வுகள் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை ஸ்ரீநகர்,-ஜம்மு - காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் திராப்காம் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் நேற்று
இன்றைய, கிரைம், ரவுண்ட், அப்


இந்திய நிகழ்வுகள்பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை


ஸ்ரீநகர்,-ஜம்மு - காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் திராப்காம் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள், குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.இந்த ஆண்டு இதுவரை ஜம்மு - காஷ்மீர் எல்லையில் மட்டும், 99 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


டில்லி மார்க்கெட்டில் பயங்கர தீவிபத்துபுதுடில்லி-டில்லியில் காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் அதிகம் உள்ள தெருவில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.டில்லி கரோல் பாக் மார்க்கெட்டில் காலணி விற்பனை செய்யும் கடைகள் அதிகம் உள்ள தெருவில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் வந்தனர். ஐந்து மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் ஏராளமான கடைகள் எரிந்து சாம்பலாகின. சேதங்களை மதிப்பீடு செய்யும் பணி நடக்கிறது. அதிகாலை நேரம் என்பதால் கடைகள் அனைத்தும் மூடியிருந்தன. இதனால் உயிர்இழப்போ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. இங்குள்ள எந்தக் கடையுமே பாதுகாப்பு விதிமுறையை கடைப்பிடிக்கவில்லை என்றும், தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.


தமிழக நிகழ்வுகள்ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்து பெண் குழந்தை பலிதிருவண்ணாமலை-திருவண்ணாமலை அருகே, 'ஸ்பீக்கர் பாக்ஸ்' விழுந்ததில், மூன்று மாத பெண் குழந்தை இறந்தது.திருவண்ணாமலையை அடுத்த சீலபந்தல் பஞ்., பிச்சானந்தலைச் சேர்ந்தவர் விஜய், 32; கூலி தொழிலாளி. இவரது மூன்று மாத பெண் குழந்தை, நேற்று முன்தினம் மாலை வீட்டில் தரையில் படுத்திருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக, பரணில் இருந்த 'ஸ்பீக்கர் பாக்ஸ்' திடீரென சரிந்து குழந்தையின் தலை மீது விழுந்தது.படுகாயமடைந்த குழந்தை, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அன்றிரவே, சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது. திருவண்ணாமலை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


முன் விரோதத்தால் வாலிபர் கொலை


திருச்சி-திருச்சியில் முன் விரோதம் காரணமாக, வாலிபரை வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.திருச்சி, அரியமங்கலம் அருகே, மேல அம்பிகாபுரத்தை சேர்ந்த ரமேஷ் மகன் ரிஷி, 19. இவர், அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார்.மேல கல்கண்டார் கோட்டை சாலையில் நேற்று காலை நடந்து சென்ற போது, அவரை வழி மறித்த மர்ம நபர்கள், அரிவாளால் சரமாரியாக வெட்டி, தப்பி ஓடி விட்டனர்.படுகாயமடைந்த ரிஷி, சம்பவ இடத்திலேயே இறந்தார். முன் விரோதம் காரணமாக, கொலை நடத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து, கொலையாளிகளை தேடுகின்றனர்.


சாலை விபத்தில் எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர் பலி


ராசிபுரம்-ராசிபுரம் அருகே சாலை விபத்தில் எஸ்.எஸ்.ஐ., உட்பட, இருவர் பரிதாபமாக பலியாகினர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் பிரிவு சாலை தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணி, சில மாதங்களாக நடக்கிறது. இதனால் நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி செல்லும் வாகனங்கள், சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளன. திருநெல்வேலியில் இருந்து ஓசூருக்கு நேற்று முன்தினம் இரவு சென்ற கார், அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு டிரம்மில் மோதி விபத்துக்குள்ளானது.

இதையறிந்த புதுச்சத்திரம் எஸ்.எஸ்.ஐ., சந்திரசேகர், 55; ராசிபுரம் போலீஸ் ஏட்டு தேவராஜன், 45; நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கோவிந்தன், நந்தகோபால், பழனி, மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதிகாலை, 2:30 மணிக்கு சாலையில் நின்று கொண்டிருந்த லாரிக்கு அருகே விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது திருநள்ளாரில் இருந்து, சேலம் மாவட்டம், இளம்பிள்ளைக்கு சென்ற டிராவல்ஸ் வேன், லாரியின் பின்புறம் மோதியது,

இதில் லாரி பின்னால் நின்று கொண்டிருந்த தேவராஜன், தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்தில் பலியானார். எஸ்.எஸ்.ஐ., சந்திரசேகருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயமும், மணிகண்டனுக்கு லேசான காயமும் ஏற்பட்டது. இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்திரசேகர் இறந்து விட்டார். மணிகண்டன் சிகிச்சை பெறுகிறார். வேனில் வந்த மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


கல்லணை கால்வாயில் சென்னை மாணவர் பலி


தஞ்சாவூர்-தஞ்சாவூர், கல்லணைக் கால்வாயில் குளித்த போது, தண்ணீரில் மூழ்கிய சென்னை மாணவர் உடல் நேற்று மீட்கப்பட்டது.சென்னை, போரூரைச் சேர்ந்த லிதர்ஷன், 21, நண்பர் முகப்பேரைச் சேர்ந்த நிதின், 21, ஆகியோர் சென்னையில் உள்ள கல்லுாரியில் பி.எஸ்சி., மூன்றாமாண்டு படித்து வந்தனர்.தஞ்சாவூர் பெரியகோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு 'டூ-வீலரில் நேற்று முன்தினம் இருவரும் வந்துள்ளனர். மாலையில், இர்வீன் பாலம் அருகே கல்லணை கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, லிதர்ஷன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தேடி வந்த நிலையில், பொட்டுவாசாவடி கிராமத்தில், கல்லணைக் கால்வாயின் கிளை வாய்க்காலான நெய் வாய்க்காலில், நேற்று காலை லிதர்ஷனின் உடல் மீட்கப்பட்டது.இது குறித்து, தஞ்சாவூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


அருவியில் செல்பி எடுத்த வாலிபர் தவறி விழுந்து பலிஜமுனாமரத்துார்-ஜவ்வாதுமலை அருவியில், 'செல்பி' எடுக்க முயன்ற போது, தவறி விழுந்த வாலிபர் பலியானார்.வேலுார் மாவட்டம் ஜவ்வாது மலையில், அமர்தி சிறு வன உயிரியல் பூங்கா அருகே அமர்தி அருவி உள்ளது. வேலுார், விருதம்பட்டை சேர்ந்த முக்தர்சி, 21; நண்பர்கள் ஐந்து பேருடன் நேற்று முன்தினம் மாலை அங்கு சென்றார்.அருவிக்கு செல்ல வனத்துறையினரின் தடை விதித்துள்ளனர். இதனால், பைக்கை மறைவான பகுதியில் நிறுத்தி, அருவிக்கு நடந்து சென்றனர். அருவி மீது நின்று ஐந்து பேரும், மொபைல் போனில் 'செல்பி' எடுத்தனர்.அப்போது, முக்தர்சி தவறி விழுந்து சேற்றில் சிக்கினார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அவர்களின் தகவல் படி, அமிர்தி வனச்சரகர் முருகன் தலைமையிலான ஊழியர்கள் முக்தர்சியின் சடலத்தை மீட்டனர். ஜமுனாமரத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


latest tamil newsஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 40 சவரண் நகை மற்றும் 40 லட்சம் பணம் கொள்ளை


மணலி,-ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து, 40 லட்சம் பணம் மற்றும் 40 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை மணலி, துர்கை அவென்யூவைச் சேர்ந்தவர் ஜான் போஸ்கோ, 63; ஓய்வுபெற்ற ராணுவ வீரர். திருவொற்றியூர் 'கான்கார்ட் யார்டில்' பணிபுரிகிறார்.நேற்று காலை, மனைவி, பிள்ளைகளுடன் வீட்டை பூட்டி விட்டு, பெசன்ட் நகர் சென்றார். மாலை திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகை, 40 லட்சம் ரூபாய், லேப்டாப் ஆகியவை திருடப்பட்டது தெரிந்தது.புகாரின்படி, மணலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் 'டேனி' வரவழைக்கப்பட்டு, விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X