வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி தமிழகத்தில் ஹிந்தியை எதிர்த்து பேசிவரும் நிலையில், டில்லியில் அமலாக்கத்துறையில் காங்., எம்.பி., ராகுல் ஆஜராவதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டபோது ஹிந்தியில் ஒழிக கோஷம் எழுப்பியவாறு சென்றுள்ளார். இது வைரலாகியுள்ளது.
‛நேஷனல் ஹெரால்டு' வழக்கில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் இன்று (ஜூன் 13) ஆஜரானார். இதனை எதிர்த்து அவர் ஆஜராகும் நாளில் நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதாக காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதேபோல், காங்கிரஸ் கட்சியினர் அமலாக்கத்துறை அலுவலக முற்றுகை போராட்டமும் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அங்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் மற்றும் திக்விஜய்சிங், ப.சிதம்பரம், சச்சின் பைலன், ஜோதிமணி, ராஜிவ் சுக்லா உள்ளிட்ட பல மூத்த தலைவர்களும் காத்திருந்தனர்.
ராகுல் ஆஜராவதற்காக வருகை தந்தபோது, காங்., மூத்த தலைவர்களும், தொண்டர்களும் அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன், ராகுல் மற்றும் அவரது வக்கீல் மட்டும் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றனர். மேலும், அங்கு போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்களை கைது செய்த போலீசார் வாகனத்தில் ஏற்றினர். அதில், காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி உள்ளிட்ட சில தலைவர்கள் போலீஸ் வாகனத்தின் உள்ளே, ஹிந்தியில் கோஷம் எழுப்பியவாறு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

தமிழகத்தில் ஹிந்தி மொழியை எதிர்த்து தனது பேச்சுகளில் வெளிப்படுத்திய ஜோதிமணி, டில்லிக்கு சென்று ராகுலுக்காக கைதானதும் ஹிந்திக்கு மாறி கோஷம் எழுப்பியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.