புதுடில்லி : “அன்றாட பழக்க வழங்கங்களில் யோகா பயிற்சிக்கும் நேரம் ஒதுக்குங்கள்,” என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச யோகா தினம் இம்மாதம் 21ல் 'மனித நேயத்துக்கான யோகா' என்ற தலைப்பில் கொண்டாப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு யோகா பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலம் மைசூரு அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அதேபோல், மத்திய அமைச்சர்கள் 75 பேரும் நாடு முழுதும் உள்ள வரலாற்று புகழ் வாய்ந்த மற்றும் பாரம்பரியம் மிக்க நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து, சமூக வலைதளத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு,மலையாளம், ஹிந்தி,பெங்காலி உட்பட பல மொழிகளில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், “சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். அன்றாட பழக்க வழக்கங்களில் யோகா பயிற்சிக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். கடந்த சில வருடங்களாக, யோகா சர்வதேச அளவில் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளது. தலைவர்கள், தலைமை செயல் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் உட்பட பல்துறை பிரபலங்களும் நாள்தோறும் யோகப் பயிற்சியை மேற்கொள்வதோடு அதனால் பெற்ற நன்மைகளையும் பகிர்ந்து வருகின்றனர்,”என கூறியுள்ளார்.