
நீண்ட நாளைக்கு பிறகு ஒரு அருமையான நாட்டிய நாடகம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
பாரதி நுாற்றாண்டு விழாவினை முன்னிட்டு சென்னையில் உள்ள ‛நிருத்திய சம்ஸ்ருதி டிரஸ்ட்' சார்பில் உலக மகா கவிக்கு உன்னத அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நாட்டிய நாடகத்தை அமைத்திருந்தனர்.

திரை விலகிய நொடி முதல் நாடகம் முடியும் வரை சிறிதும் தொய்வின்றி நாடகம் சென்றது.பாரதி வெறும் வாய்ச்சொல் வீரரில்லை சொன்னதையே செய்தார் செய்ததையே சொன்னார் என்பதை இந்த நாட்டிய நாடகம் வலியுறுத்தியது.

குறுகிய காலமே வாழ்ந்த பாரதியிடம் நீண்ட காலம் வாழ்ந்த அனுபவங்கள் உண்டு, அவரது வாழ்வில் சோகம்,வறுமை,கோபம்,சந்தோஷம் என்று நவரசங்களுக்கும் பஞ்சமே இல்லை ஆனால் இந்த நாடகம் அவரது சந்தோஷ தருணங்களை மட்டுமே பெரும்பாலும் எடுத்துக் கொண்டு அதன் மூலம் பார்வையாளர்களையும் சந்தோஷப்படுத்தும் உத்தியை கையாண்டிருக்கின்றனர்,பார்வையாளர்கள் மத்தியில் எழுந்த இடைவிடாத கைதட்டல் இந்த உத்திக்கு கிடைத்த வரேவேற்பாகவே எடுத்துக் கொள்ளலாம்.

நிருத்திய சம்ஸ்ருதி ட்ரஸ்ட் நடனப்பள்ளி ஆசிரியரான வைதேகிஹரிஷ் பாரதியாக நடித்துள்ளார்,பாரதி என்றால் கையை கட்டிக்கொண்டு வானத்தை நோக்கி கனல் கக்கும் பார்வை பார்க்கும் பாரதியாக பார்த்துவிட்டவர்களுக்கு பல்வேறு அபிநயம் காட்டி சின்ன சின்ன அசைவுகளுடன் ஆடவும் செய்யும் சந்தோஷ பாரதியை இந்த நாடகத்தில் பார்த்து மகிழலாம் காரணம், பாரதியாக நடித்துள்ள வைதேகிஹரிஷ் நடனப்பள்ளியின் ஆசிரியை என்பதால்..அதுவும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது அதிலும் செல்லம்மாளின் தோளில் கைபோட்டுக் கொண்டு நடக்கும் போது பாரதியின் முகத்தில் பொங்கும் பெருமிதமே தனி.

சுமார் ஒரு மணி நேர அளவே என்றாலும் நாட்டிய நாடகத்தில் பாரதியை முழுமையாகவே சொல்லிவிட்டனர் அதிலும் பாரதியின் குழந்தை பருவத்தை மிக நன்றாகவே சொல்லியுள்ளனர் நாடகத்தின் ஒலிஒளி அமைப்பு எல்லா காட்சியையும் பிரமாதப்படுத்துகிறது.

நாட்டிய நாடகம் என்று வந்துவிட்ட பிறகு வெறுமனே வசனம் மட்டும் பேசிக்கொண்டிருக்க முடியுமா? நடனப்பள்ளி மாணவியரின் அசத்தலான நடனமும் அவ்வப்போது கதையை ஒட்டியே செல்லும்படியாக கெட்டிகாரத்தனமாக அமைத்துள்னர்.நாடகம் முழுவதிலும் பெண்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர் மொத்தம் 23 பேர் என்றனர் அதில் குழந்தையாக வந்து நடித்த மிருதுளா இன்னும் சிறப்பு, மேடை பயம் கொஞ்சமும் இல்லாமல் நாடகத்திற்கு உயிர்கொடுக்கிறார்.

மகிழ்ச்சியையும் மனநிம்மதியையும் பாரதிபற்றிய நல்லதொரு சித்திரத்தையும் மனதில் அழுந்த பதிய வைத்த உலக மகாகவி நாட்டிய நாடகம் எங்கு நடந்தாலும் பார்க்க தவறாதீர்கள்.

இதுவரை முகம் காட்டாமல், ஆனால் என்னை எப்படியாவது இந்த நாடகத்தை பார்க்கவைத்துவிடவேண்டும் என்பதற்காக பெரும் பிரயாத்தனம் எடுத்துக் கொண்ட நடனப்பள்ளி மாணவி ஜெயஸ்ரீக்கு நன்றிகள் பல.
-எல்.முருகராஜ்.