புதுடில்லி: மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் காலியாக உள்ள, 10 லட்சம் பணியிடங்களை, போர்க்கால அடிப்படையில், ஒன்றரை ஆண்டுக்குள் நிரப்பும்படி, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
10 லட்சம்
மத்திய அரசில், பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், வேலை வாய்ப்பின்மை பிரச்னை தீவிரமாக உள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.பல மாநில சட்டசபை தேர்தல்களின் போது, இந்தப் பிரச்னையை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வந்தன.இதற்கு, தனியார் துறைகளில், பல புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக, மத்தியில் ஆளும் பா.ஜ., பதிலளித்து வந்துள்ளது.
இந்நிலையில், நாடு முழுதும், மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார். முன்னதாக, காலியிடங்கள் தொடர்பான அறிக்கைகளை தாக்கல் செய்ய, அனைத்து துறைகள், அமைச்சகங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இது குறித்து, மிக விரிவாக ஆய்வு செய்த பிரதமர் மோடி, அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள், மத்திய அரசில் காலியாக உள்ள, 10 லட்சம் பணியிடங்களை நிரப்ப, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
லோக்சபாவுக்கு, 2024 மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதன்படி பார்க்கையில், அந்த தேர்தலுக்கு முன்பாகவே, நாடு முழுதும், 10 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வாய்ப்பு
லோக்சபா தேர்தலில், இதை முன்வைத்து பிரசாரம் செய்ய, பா.ஜ.,வுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.மத்திய அரசின் சம்பளம் மற்றும் படிகள் செலவினத் துறையின் ஆண்டு அறிக்கையின்படி, கடந்த, 2020 மார்ச், 1ம் தேதி நிலவரப்படி, மொத்தம் அனுமதிக்கப்பட்டுள்ள, 40.78 லட்சம் பணியிடங்களில், 31.91 லட்சம் பணியிடங்களே நிரப்பப்பட்டுள்ளன. அனைத்து துறைகளிலும், 21.75 சதவீத இடங்கள் காலியாக இருந்தன.மத்திய அரசின் அனைத்து துறைகளையும் ஒப்பிடும்போது, 92 சதவீதம் பேர், ரயில்வே, ராணுவத்தின் சிவில் பிரிவு, உள்துறை அமைச்சகம், தபால் துறை, வருவாய் துறையில் பணியாற்றுகின்றனர்.
ரூ.2.25 லட்சம் கோடி
யூனியன் பிரதேசங்களைத் தவிர்த்து, மத்திய அரசில் தற்போது பணியாற்றும், 31.33 லட்சம் பேரில், 40.55 சதவீதம் பேர் ரயில்வேயில் உள்ளனர். உள்துறை அமைச்சகத்தில், 30.5; ராணுவத்தின் சிவில் பிரிவில், 12.31; தபால் துறையில், 5.66; வருவாய் துறையில், 3.26 சதவீதம் பேர் பணியாற்றுகின்றனர். மற்ற அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளில், 7.72 சதவீதம் பேர் பணியாற்றுகின்றனர்.போனஸ், பயணச் சலுகை உள்ளிட்ட சலுகைகள், படிகள் இல்லாமல், 2019 - 2020ம் ஆண்டில், சம்பளமாக, 2.25 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில், இது, 2.08 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.மத்திய போலீஸ் படையில், மொத்தம் அனுமதிக்கப்பட்ட 10.16 லட்சம் பணியிடங்களில், 9.05 லட்சம் பேரே பணியாற்றுகின்றனர். இதில் மட்டும், 1.11 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மத்திய அரசு பணிகளில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், 10 லட்சம் பேரை தேர்வு செய்யும் திட்டத்தை செயல்படுத்த, பிரதமர் மோடி உத்தர விட்டதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணி, உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 'பிரதமரின் உத்தரவு, இளைஞர்களிடம் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. அவர்களுக்கு பலவாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது' என, மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்கள் மாநாடு, ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில், இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. இதில், நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கும் நிகழ்ச்சிகளில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.இதில், அனைத்து மாநிலத் தலைமைச் செயலர்கள், மத்திய அரசு அதிகாரிகள், நிபுணர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். பொருளாதார வளர்ச்சி, புதிய கல்விக் கொள்கை, விவசாயிகளுக்கான மாற்றுப் பயிர் திட்டம் என, பல விஷயங்கள் குறித்து, இதில் விவாதிக்கப்பட உள்ளது.இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் அம்சங்கள் மற்றும் முடிவுகள் குறித்து, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும், 'நிடி ஆயோக்' அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்படும். அதில், அனைத்து மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பர்.அனைத்து மாநிலங்களும் ஒரு அணியாக, ஒரு குழுவாக இணைந்து செயல்படும் நோக்கத்துடன், அனைத்து தரப்பினர் கருத்துக்கள், ஆலோசனைகள் கேட்கும் வகையில், இந்த மாநாடு நடத்தப்பட உள்ளதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.