வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
கி.மூர்த்தி, நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆன்லைன் ரம்மி' விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து, அவசர சட்டம் இயற்றுவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு குழுவை நியமித்துள்ளது.
![]()
|
கந்து வட்டி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு இரண்டுமே, நேரடியாக மக்களின் உயிரை பறிக்கும் விஷயங்கள். கந்து வட்டியிலாவது, வாங்கிய பணத்தை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த முடியாமல் தனியாகவோ, குடும்பத்துடனோ தற்கொலை செய்து கொள்கின்றனர்.
ஆனால், ஆன்லைன் ரம்மி விளையாட்டிலோ, காசை கண்ணால் பார்க்காமலேயே, கடனாளியாகி தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த விளையாட்டை, கையில், 'ஆண்ட்ராய்ட்' போன் வைத்திருக்கும் பள்ளி மாணவ - மாணவியரும் ஆடத் துவங்கி, மோசம் போகும் விபரீதமும் உண்டு.இப்படிப்பட்ட மோசமான, உயிரை பறித்துக் கொண்டிருக்கும் விளையாட்டை, அவசர சட்டம் போட்டு தடை செய்து, உயிர் இழப்புகளையும், பொருள் இழப்புகளையும் தடுக்காமல், சட்டத்தை இயற்ற குழுவை அமைத்துள்ளது வேடிக்கையாக உள்ளது.
இதைப் பார்க்கும் போது, ஆன்லைன் ரம்மி விளையாட்டை உடனடியாக தடை செய்வதைக் காட்டிலும், தடை செய்வதை எவ்வளவு காலத்திற்கு தள்ளி போடலாம் அல்லது ஒத்தி வைக்கலாம் என்பதில் தான், அரசு ஆர்வமாக உள்ளது தெரிகிறது.தி.மு.க., ஆட்சி பீடத்தில் அமர்ந்த நாள் முதல், கருணாநிதிக்கு சிலை வைப்பதற்கும், அவரின் சமாதியை மெருகூட்டுவதற்கும், மணி மண்டபம் கட்டுவதற்கும், அவரின் பெயரில் நுாலகம் அமைப்பதற்கும் மட்டும் தான், முதல்வர் ஸ்டாலின் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார்.
![]()
|
மற்றபடி ஒவ்வொரு விஷயத்திற்கும் நின்றால் குழு, நிமிர்ந்தால் குழு, நடந்தால் குழு, அமர்ந்தால் குழு, படுத்தால் குழு, எழுந்தால் குழு, உண்டால் குழு, உறங்கினால் குழு என்று ஒவ்வொன்றுக்கும் குழு அமைத்து, ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறப்போகும் நீதிபதிகளுக்கு ஒரு மறுவாழ்வு திட்டத்தை செயல்படுத்தி கொண்டிருக்கிறாரே அன்றி, சொந்தமாக சிந்தித்து, எதையும் முடிவெடுத்து செயல்படுத்துவதாக தெரியவில்லை.'நீட்' தேர்வு விவகாரத்தில் ஐந்தாறு மாணவியர் மாண்டிருக்கலாம்.
அதற்காக ஊரைக் கூட்டி ஒப்பாரி வைத்து, லட்சக்கணக்கில் நிதியுதவியும் செய்து, அந்த, 'நீட்' தேர்வு விவகாரத்தை மூலதனமாக்கி, பிரச்னையாக்கி, அதை தங்கள் தேர்தல் வாக்குறுதியிலும் இடம் பெறச் செய்து, மக்கள் ஓட்டுகளை பெறத் தெரிந்த தி.மு.க.,வுக்கு, இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை உடனடியாக தடை செய்ய வேண்டியது, அவ்வளவு முக்கியமாக தெரியவில்லை.
அது தாங்க கழகம்... திராவிட முன்னேற்ற கழகம்... திராவிட மாடல் அரசு!'கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?' என்றொரு சொலவடை உண்டு. இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது தொடர்பான அரசின் நடவடிக்கை, அந்த சொலவடையை நினைவூட்டுவதாகவே உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement