வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கடலுார் : தடைக்காலம் நேற்றுடன் முடிந்து, கடலுார் மாவட்டத்தில் நள்ளிரவில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கிளம்பினர்.
கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும், ஆண்டுதோறும் ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 15 வரையில், 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கியது.கடலுார் மாவட்டத்தில் நல்லவாடு முதல் சிதம்பரம் டி.எஸ்.பேட்டை வரையில், 49 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் விசை படகுகளில் மீன்பிடிக்க செல்லவில்லை.
கடலுார் துறைமுக மீன்பிடி துறைமுகம் சோனாங்குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி பகுதிகளில், விசைப்படகுகளை நிறுத்தி வைத்து, வர்ணம் பூசுதல், இன்ஜின் பழுது பார்த்தல், வலைகள் சரி செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுவந்தனர். தடைக்காலம் நேற்றுடன் (14ம் தேதி) முடிந்ததையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக, கடலுார் மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் படகுகளில் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் டீசல் நிரப்புதல், தண்ணீர், மீன்கள் கெடாமல் இருக்க ஐஸ் உள்ளிட்டவைகளை படகுகளில் ஏற்றி ஆயத்தமாகி வந்த மீனவர்கள் நேற்று அதிகாலை, மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

மீன்பிடி தடைக்காலத்தையொட்டி, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து மீன்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.மேலும், உள்ளூரில் பைபர் படகுகள், கட்டுமரங்களில் கடலில் குறிப்பிட்ட துாரம் வரையில் சென்று பிடித்து வரப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. விசைப்படகுகள் மூலம் அதிக அளவில் மீன் பிடிக்கப்பட்டு வந்த நிலையில், தடைக்காலங்களில் குறைந்த அளவில் மீன்கள் பிடித்து வரப்பட்டன. இதனால், மீன்வரத்து குறைந்து விலை உயர்ந்தது.
குறிப்பாக, கிலோ ரூ. 500 முதல் ரூ. 600 வரையில் கிடைத்த வஞ்சிரம் மீன்கள், ரூ. 1000 முதல் ரூ.1500 வரையில் விற்பனை செய்யப்பட்டது. அதே போன்று, ரூ.250க்கு கிடைத்த சங்கரா ரூ.450 வரை விற்கப்பட்டது. நண்டு ரூ. 350 முதல்ரூ. 400, கொடுவா ரூ. 500 என, மீன்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. இந்நிலையில், தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்றுடன் முடிந்து, 61 நாட்களுக்கு பிறகு நள்ளிரவு முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால், மீன்வரத்து அதிகரிக்கும் என்பதால், கடலுார் மாவட்டத்தில் மீன்கள் விலை குறையும் என, அசைவ பிரியர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
மீன்கள் விலை உயர்வு மற்றும் மீன்கள் கிடைக்காததால், அசைவ பிரியர்கள் பலரும், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சிக்கு மாறினர். இதனால், அதன் விலையும் தாறுமாக உயர்ந்தது.ஆட்டுக்கறி விலை கிலோ ரூ. 800ம், கோழி இறைச்சி விலை கிலோ ரூ. 270 வரையும் விலை உயர்த்தது. மீன்பிடி தடைக்காலம் முடிவதால், அதன் விலைகளும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.