புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 13 கட்சிகள் பங்கேற்றன. அழைப்பு விடுத்ததில் 9 கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
இந்தியாவில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் ஜூலை 18ல் நடக்க உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ., நிறுத்தும் வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சி நடந்து வருகிறது. இது குறித்து ஆலோசனை நடத்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, டில்லியில் இன்று (ஜூன் 15) நடந்த கூட்டத்தில் 13 கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்றனர். ஆம்ஆத்மி, டிஆர்எஸ், சிரோன்மணி அகாலி தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சுர்ஜேவாலா, திமுக சார்பில் டி.ஆர்.பாலு, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவார், பிரபுல் பட்டேல், சமாஜ்வாதி கட்சி சார்பில் அகிலேஷ் யாதவ், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தேவகவுடா, குமாரசாமி, தேசிய மாநாட்டு கட்சி சார்பில் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.
