வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வேலுார்: ‛தமிழக மண்ணின் பெருமை தெரியாமல் தமிழக கவர்னர் ரவி சனாதானம் குறித்து பேசியிருக்கிறார், சனாதானத்திற்கு சாவு மணி அடித்த மண் இது, மீண்டும் அதை உயிர்ப்பிக்க எந்த கொம்பனாலும் முடியாது' என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் வேலுாரில் இன்று (ஜூன் 15) நடந்தது. அணைக்கட்டு தி.மு.க., எம்.எல்.ஏ., நந்தகுமார் தலைமை வகித்தார். நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, தி.மு.க., எம்.பி., க்கள் ஆ.ராசா, கதிர் ஆனந்த், வேலுார் மேயர் சுஜாதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் மேகதாது விவகாரத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது அரசியல் ஸ்டன்ட் என கர்நாடகா மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுவது ஜனநாயகத்திற்கு அழகல்ல.

காவிரி
காவிரி விவகாரத்தில் நாங்கள் தடைக்கல்லாக இருப்பதாக கர்நாடகா முதல்வர் சொல்லியிருக்கிறார். ஆனால் தடைக்கல்லாக இருந்தது கர்நாடக அரசு தான். காவிரியின் முழு விவரமே அவருக்கு தெரியவில்லை. முதலில் 1926ம் ஆண்டு ஒப்பந்தம் முடிந்தது என்று கூறினார்கள். காவிரி ஆணையம் வேண்டும் என நாங்கள் கேட்டதை தடுத்தது கர்நாடகா. அதை எதிர்த்து வழக்கு போட்டதும், தடைக்கல் போட்டதும் கர்நாடக அரசு தான். பிறகு நாங்கள் உச்ச நீதிமன்றம் சென்று இறுதி தீர்ப்பு வாங்கினோம். அதை ஏற்க மாட்டோம் என கூறியது கர்நாடக அரசு. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தலைவர் நியமிக்காமல் தடுத்ததும் கர்நாடக அரசு தான்.
காவிரி வரலாற்றில் ஒவ்வொரு அங்குலமும் தடையாக இருந்தது கர்நாடக அரசு தான். காவிரி குறித்து பிரதமருக்கு தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தை மத்திய அரசு ஏற்காது எனக்கூற இவர் யார்? மாநில பங்களிப்பு 1772.5 டி.எம்.சி., அளவு நமக்கு கிடைக்க வேண்டி தண்ணீர். அப்படி கிடைத்தால் தான் நமக்கு தண்ணீர் வரும். ஆனால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு கீழ் வரும் தண்ணீர் தமிழகத்திற்கு சொந்தம் என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. இதற்கான நகலை கர்நாடகா முதல்வருக்கு அனுப்பி வைக்கிறேன். கர்நாடகா அரசு தான் எல்லா விவகாரத்திலும் தமிழகத்திற்கு தடைக்கல்லாக இருக்கிறது. தி.மு.க., இனியும் பொறுத்துக் கொள்ளாது.

சனாதனம்
எங்களின் கடிதமே தவறு என்றும், ஸ்டன்ட் என்றும் கூறுகின்றார். அவர் தான் ஸ்டன்ட் அடிக்கிறார். எங்கள் தலைவரை தொட்டால் இது தி.மு.க., ஜல்லிக்கட்டு மாடு சும்மா இருக்காது. இந்த மண்ணினுடைய பெருமை தெரியாமல் தமிழக கவர்னர் ரவி சனாதானம் குறித்து பேசியிருக்கிறார். சனாதானத்திற்கு சாவு மணி அடித்த மண் இது. மீண்டும் அதை உயிர்ப்பிக்க எந்த கொம்பனாலும் முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.