அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரிதாக வெடித்துள்ளதால், திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தலைமை பதவியை பிடிக்க, பன்னீர்செல்வம் - பழனிசாமி இடையே துவங்கியுள்ள குஸ்தி, 'போஸ்டர்' யுத்தம், சாலை மறியல் அளவுக்கு தீவிரமடைந்து உள்ளது. இதற்கிடையில், இரு தரப்புக்கும் இடையில் சுமுக உடன்பாடு காணும் முயற்சி தோல்வி அடைந்தால், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் நடந்த, அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், அ.தி.மு.க.,வை பழனிசாமி கட்டுப்பாட்டில் கொண்டு வர, ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.
இந்த விவகாரம் தற்போது, கட்சியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வரும் 23ல் கூடவுள்ள பொதுக்குழுவுக்கு முன், பழனிசாமியை முன்னிலைப்படுத்த, அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு, இந்த கோஷத்தை கிளப்பி உள்ளனர். அதற்கு போட்டியாக, 'இதுவரை விட்டுக் கொடுத்தது போதும்; இம்முறை விட்டுக்கொடுக்கக் கூடாது' என, பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் வரிந்து கட்டத் துவங்கி உள்ளனர்.
சென்னையில் நேற்று பன்னீர்செல்வம் வீட்டில் ஆதரவாளர்கள் கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன், மாவட்ட செயலர்கள் சையத்கான், அசோக், கணேஷ் ராஜா, எம்.பி., தர்மர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதே நேரத்தில், பழனிசாமியும் தன் ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலோசனை முடிந்து புறப்பட்ட முன்னாள் அமைச்சர் சீனிவாசன், தன் ஆதரவு பழனிசாமிக்கு தான் என, திட்டவட்டமாக தெரிவித்தார்.

சுமுக முடிவு
முன்னாள் அமைச்சர்கள் விஸ்வநாதன், உதயகுமார் போன்றோர், இருவர் வீட்டிற்கும் சென்று வந்தனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், காமராஜ் போன்றோர், நேற்று முன்தினம் இரவு பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர். பெரும்பாலான நிர்வாகிகள், 'இரு தரப்பும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்' என, எங்கும் செல்லாமல் அமைதி காத்து வருகின்றனர். இரு தரப்பிலும் சமாதானம் ஏற்படுத்தவும், சிலர் முயற்சித்து வருகின்றனர்.
இது குறித்து, முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறுகையில், ''மூத்த தலைவர்கள் விவாதித்து வருகின்றனர். சுமுக முடிவு எடுப்பர்,'' என்றார்.
முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் கூறுகையில், ''சுமுக நிலை ஏற்படுத்த அனைவரும் முயற்சித்து வருகிறோம். இதில், வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.

நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று முன்தினம் இரவு பன்னீர்செல்வம் வீட்டுக்குச் சென்று, அவரை விட்டு கொடுக்கும்படி வலியுறுத்த முயற்சித்தார். பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், அவரை வார்த்தைகளால் வறுத்தெடுத்துள்ளனர். 'எத்தனை முறை தான் பன்னீர்செல்வம் விட்டுக் கொடுக்க வேண்டும்?' என, சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர். அதனால், அவர் பதில் கூறாமல் சென்று விட்டார். இம்முறை விட்டுக் கொடுப்பதில்லை என்பதில், பன்னீர்செல்வம் உறுதியாக உள்ளார்.
பழனிசாமி தரப்பிடம் சிலர், 'இப்போது இப்பிரச்னை வேண்டாம்; பின்னர் பார்த்துக் கொள்வோம். தற்போதைக்கு ஒற்றைத் தலைமை யார் என்று முடிவு செய்யவில்லை எனக் கூறி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்' என வலியுறுத்தி உள்ளனர். அதை, பழனிசாமி தரப்பு ஏற்கவில்லை.
பழனிசாமி தரப்பு விடாப்பிடியாக இருப்பதால், உள்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படாதது குறித்த ஆதாரங்களுடன், பொதுக்குழுவுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்க, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.இரு தரப்பிலும் பேசி சுமுக தீர்வு காணப்பட்டால், வரும் 23ம் தேதி திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடக்கும். இல்லையெனில், பொதுக்குழு தள்ளிப் போகவோ, பிரச்னை பெரிதாகவோ வாய்ப்பு அதிகம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடும் அதிர்ச்சி
இதற்கிடையில், ஒற்றைத் தலைமை விவகாரத்தில், பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே, மாநிலம் முழுதும், 'போஸ்டர்' யுத்தம் நடந்து வருகிறது.'கட்சிக்கு தலைமையேற்க வர வேண்டும்' என பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுத்து, அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்; பழனிசாமி ஆதரவாளர்களும் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
சென்னையில் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள், 'ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட நிகழ்கால பரதனே... வழிநடத்த வாருங்கள்!' என பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுத்து, போஸ்டர்கள் ஒட்டிஉள்ளனர்.'அன்று தர்மயுத்தம் இல்லையெனில், இன்று ஆட்சியும், கட்சியும் இல்லை. தாயின் தலைமகனே... தலைமையேற்க வா!' என, ராமநாதபுரம் மாவட்டத்தில், பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக, போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
தேனி, விருதுநகர் மாவட்டங்களிலும், பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதற்குப் போட்டியாக, பழனிசாமிக்கு ஆதரவாக, மாநிலம் முழுதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 'ஒன்றரை கோடி தொண்டர்களின் ஒட்டுமொத்த விருப்பம் எடப்பாடியார்' என்று அவர்கள் கூறியுள்ளனர்.இருவருடைய ஆதரவாளர்களும் போஸ்டர் யுத்தத்தில் ஈடுபட்டிருப்பது, கட்சி நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சாலை மறியல்
சில இடங்களில், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்களை, பழனிசாமி ஆட்கள் கிழித்துள்ளனர்.இதைக் கண்டித்து, சென்னை, கிரீன்வேஸ் சாலையில், பன்னீர்செல்வம் வீட்டின் முன் குவிந்திருந்த அவரது ஆதரவாளர்கள், பகல் 1:00 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
' சென்னை கிரீன்வேஸ் சாலை மீண்டும் பரபரப்பாகி உள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில், சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் தர்மயுத்தம் துவங்கியபோது, அவர் தங்கியிருந்த கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில், தினமும் நிர்வாகிகள் சந்திப்பு, ஆலோசனை என பரபரப்பு நிலவியது. அதேபோல், சசிகலா ஆதரவு அணியில் இருந்த பழனிசாமி வீட்டிலும் ஆலோசனை நடந்தது. அதேபோன்ற நிலை தற்போது மீண்டும் துவங்கி உள்ளது.பழனிசாமி, தான் முதல்வராக இருந்தபோது வசித்த வீட்டிலேயே, தற்போதும் வசித்து வருகிறார். பன்னீர்செல்வம், அதே சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். கட்சியில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில், மீண்டும் கிரீன்வேஸ் சாலை பரபரப்பாகி உள்ளது.
- நமது நிருபர் -