வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த தென்பொன்பரப்பியைச் சேர்ந்தவர் கருப்பையா மனைவி மணிமேகலை, தனியார் கல்லுாரி பேராசிரியை. இருவரும் கடந்த 1ம் தேதி காலை கள்ளக்குறிச்சி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பங்காரம் அருகே பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், மணிமேகலையின் கழுத்தில் இருந்த ஐந்தரை சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்றனர்.
தொடர்ந்து, அதே மர்ம நபர்கள் இந்திலி அருகே பைக்கில் சென்ற அரசு பள்ளி ஆசிரியை தியாகராஜன் மனைவி செல்வக்கரசி அணிந்திருந்த 3 சவரன் செயினையும் பறித்தனர்.கடந்த 13ம் தேதி கள்ளக்குறிச்சி நகரில் காளி கோவில் கும்பாபிேஷக விழாவில், வாய்க்கால் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ஆசைத்தம்பி மனைவி சொர்ணபுஷ்பம், 60; அணிந்திருந்த 13 சவரன் தாலிச் செயின். சிதம்பரம் பிள்ளை தெருவைச் சேர்ந்த கந்தசாமி மனைவி விஷ்ணுபிரியா, 25; அணிந்திருந்த 7 சவரன் செயின், கம்பன் நகர் கார்த்திகேயன் மனைவி சிவருத்ரா, 31; அணிந்திருந்த 5 சவரன் செயின். மேலும் ஒரு பெண் அணிந்திருந்த 2 சவரன் செயின் என 27 சவரன் நகைகளை ஒரே நாளில் மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் சம்மந்தப்பட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.இதுதவிர கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த மே மாதம் இறுதி வாரத்தில் இருந்து ஜூன் மாதம் முதல் வாரம் வரை 3க்கும் மேற்பட்ட கத்திக் குத்து சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்ததால், கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் வழிப்பறி, செயின் பறிப்பு மற்றும் கொலை, கொலை முயற்சி சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.எனவே, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கைது செய்ய தயங்கும் போலீசார்
தமிழகத்தில் சில மாதங்களாக விசாரணை கைதி இறப்பு சம்பவம் அதிகரித்து வருவது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அரசுக்கு களங்கம் ஏற்படுகிறது. அதனையொட்டி காவல் துறை உயரதிகாரிகள் குற்றவாளிகளை கைது செய்யும் நடைமுறையில், புதிய நடைமுறைகளை கையாளுமாறு போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.இதன்காரணமாக குற்றவாளிகளை கைது செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை போலீசார் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக உடல் நலக் குறைபாடு, போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள், தொடர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தயங்குகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ள பலே திருடர்கள் அச்சமின்றி பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி வருகின்றனர்.