வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
ஆர்.நடராஜன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக கவர்னர் ரவி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 'சனாதன தர்மம் நம்மை நல்வழிப்படுத்துகிறது. ரிஷிகளாலும், முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் இந்தியா உருவாக்கப்பட்டுள்ளது' என புகழ்ந்து பேசினார். உடனே, தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு, 'கவர்னர் கருத்தை ஏற்க முடியாது. சனாதன தர்மத்திற்கு ஆதரவாகவும், மதசார்பின்மைக்கு எதிராகவும் கவர்னர் பேசுவது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல' என்று எதிர்வினை ஆற்றியிருக்கிறார்.
![]()
|
நல்லது டி.ஆர்.பாலு அவர்களே...உங்கள் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பார்லிமென்ட் உறுப்பினர். அவர் ஹிந்துக்கள், கோவில்கள், புராணங்கள் பற்றி கடுமையான மற்றும் அருவருப்பான விமர்சனங்களை முன்வைத்தாரே... அது, அரசியல் சட்டத்தை மீறிய செயல் இல்லையா? அவர் வகிக்கும் எம்.பி., பதவிக்கு அது அழகா?
![]()
|
உங்கள் கட்சியின் தலைவர் ஏன் அவரை கண்டிக்கவில்லை; அவர் பேசியதை 'வாபஸ்' பெறும்படி சொல்லவில்லை. உங்கள் தலைவர் ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, இஸ்லாமிய விழாவில், ஹிந்து சமய மந்திரங்கள் பற்றி அருவருப்பாக விமர்சனம் செய்தார். அப்படி விமர்சித்தது, அவர் வகித்த பதவிக்கு அழகானதா? 'எல்லா மதத்துக்கும் பொதுவானவனாக, அரசியல் சட்டப்படி அரசை நடத்துவேன்' என்று பதவிப் பிரமாணம் செய்து விட்டு, இப்போது ஹிந்து மதத்திற்கு எதிராக, உங்கள் கட்சியின் தலைவரான முதல்வரும், மற்ற சில நிர்வாகிகளும் நடக்கின்றனரே, அது மட்டும் சரியா? இதற்கு விளக்கம் சொல்லுங்களேன்.
'மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர் தான் கவர்னர் என, உச்ச நீதிமன்றமும், அரசியல் சட்டமும் சொல்லியிருக்கிறது' என்கிறீர்கள். இது போன்று, தீர்ப்பின் ஒரு வரியை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பேசாதீங்க. கவர்னர் என்ன பேச வேண்டும் என்பதை, தமிழக சட்டசபை முடிவு செய்யும் என்று எந்த நீதிமன்றமும் கூறவில்லை.
![]()
|
கவர்னர் என்ன பேச வேண்டும் என்று நீங்கள் தீர்மானிக்காதீர்கள்; அது நடக்கவும் நடக்காது. கவர்னர் ஒன்றும் தலையாட்டி பொம்மையல்ல என்பதை உணருங்கள். அதே நேரத்தில், ஓட்டளித்த அனைத்து மக்களுக்கும் சாதகமாக, பாரபட்சமில்லாமல், உங்களின் தி.மு.க., அரசு செயல்படுகிறதா என்று, ஒன்றுக்கு பல முறை சுயபரிசோதனை செய்து பேசுங்கள். முதலில் உங்கள் கட்சியினரை திருத்துங்கள்... அப்புறமாக கவர்னர் பக்கம் செல்லுங்கள்.