சென்னை : அ.தி.மு.க., பொதுச் செயலராக பழனிசாமியை தேர்வு செய்ய மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து, பழனிசாமி தரப்பில் ஆலோசனை நடந்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க.,வில் ஒற்றைத்தலைமை குறித்த விவாதம் எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில், பழனிசாமி வீட்டில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலராக பழனிசாமியை தேர்வு செய்வது, பன்னீர்செல்வத்துக்கு அவைத் தலைவர் மற்றும் வழிகாட்டுதல் குழுத் தலைவர் பதவிகளை வழங்க ஆலோசித்துள்ளனர்.
தற்போதுள்ள, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை நீக்கவும், பொதுச் செயலரை தேர்வு செய்யவும், பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசித்துள்ளனர். இந்த தகவலை, பன்னீர்செல்வத்திடம் தெரிவிக்கவும், அவர் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும், இந்த முடிவை அமல்படுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக, பழனிசாமி ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

அதேநேரம், 'இதுபோன்ற முடிவை ஏற்பதில்லை; தற்போதைய நிலையே தொடர வேண்டும்' என்பதில், பன்னீர்செல்வம் உறுதியாக இருப்பதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இன்று பழனிசாமி தரப்பில், முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வத்தை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். எனவே, இன்றும் இரு தரப்பிலும் பேச்சு, ஆலோசனை தொடரும் என, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
'அமைதி காக்கணும்!'
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நேற்று இரவு விடுத்த அறிக்கையில், 'தொண்டர்கள் அனைவரையும், தயவு செய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.