வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
திருப்பூர் : சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், புதிய வரி விதிப்பு குறித்து, திருப்பூர் மாநகராட்சியில், கட்டடங்கள் மறு சீராய்வு பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி நிறைவடைந்த பின்பே உயர்த்தப்பட்ட புதிய வரி வசூலிக்கப்படும்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 2,62,360 சொத்து வரி விதிப்புகள் உள்ளன. இவற்றில், 1.62 லட்சம் வீடுகள், 60 ஆயிரம் வர்த்தக கட்டடங்கள், 40 ஆயிரம் தொழிற்சாலை கட்டடங்கள் உள்ளன.
![]()
|
சொத்து வரியாக 91.06 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு வருவாய் உள்ளது. வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் என பல தரப்பட்ட வரி விதிப்புகள் இதில் உள்ளன.சமீபத்தில், உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சொத்து வரிகளை உயர்த்திக்கொள்ள அரசு அனுமதித்தது. அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சியில் கடந்த ஏப்., 22ல் நடந்த சிறப்பு கூட்டத்தில், சொத்து வரி உயர்த்த தீர்மானிக்கப்பட்டது.அதன்படி, 600 சதுர அடி வரை வீடுகளுக்கு 25 சதவீதம் வரி உயர்வு, மேலும் 1200 சதுர அடி வரை 50 சதவீதம்; 1800 சதுர அடி வரை 75 சதவீதமும், 1800 சதுர அடிக்கு மேல் உள்ள வீடுகளுக்கு 100 சதவீதமும் வரி உயர்த்த முடிவானது; வணிக நிறுவனங்களில், 100 சதவீதம், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களுக்கு 75 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது. காலியிடங்களைப் பொறுத்தவரை 100 சதவீதம் உயர்த்தப்பட்டது.
![]()
|
புதிய சொத்து வரியை வரி விதிப்பு கட்டடம் வாரியாக கணக்கீடு செய்து நிர்ணயிக்க வேண்டியுள்ளது. இதற்காக அனைத்து பகுதியிலும் மாநகராட்சி வருவாய் பிரிவினர் இதற்கான படிவத்தை வினியோகித்துள்ளனர். அதில் சொத்து குறித்த விவரங்கள் பூர்த்தி செய்து கட்டட உரிமையாளர் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில், பூர்த்தி செய்த படிவங்களைப் பெற்று உரிய திருத்தங்கள் மேற்கொண்டு, மறு ஆய்வு செய்த பின்பே புதிய வரி விதிப்பு அறிவிக்கப்படும். இப்பணி தற்போது மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எப்போது உயரும்?மாநகராட்சி வருவாய் பிரிவினர் கூறியதாவது:நிலுவையில் உள்ள கடந்த நிதியாண்டுக்கான வரியினங்கள் வழக்கம் போல் வசூலிக்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டுக்கான புதிய வரியினம் இந்த படிவங்கள் பெற்று, மறு ஆய்வு செய்த பின்பே வசூலிக்கப்படும்.
இம்மாத இறுதிக்குள் இப்பணி முழுமையாக செய்து முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருவாய் பிரிவினர் மூலம் பகுதிவாரியாக கட்டடங்கள் அளவீடு செய்து சரி பார்க்கும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மறு சீராய்வு என்பதால் நடைமுறைச் சிக்கல் காரணமாக தாமதமாகிறது. இருப்பினும் குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிக்கும் வகையில் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த புதிய வரி விதிப்பின் மூலம் மாநகராட்சிக்கு கணிசமாக வருவாய் கூடும். இருப்பினும் நான்கு விதமாக வரி உயர்ந்துள்ளது. எனவே அளவீடு பணி முடிந்த பின்பே வருவாய் அளவைக் கணக்கீடு செய்ய முடியும்.புதிதாக கட்டி முடித்து வரி விதிப்புக்கு வரும் கட்டடங்கள் அதன் அளவுக்கு ஏற்ப, புதிய வரி அடிப்படையில் வசூலிக்கப்படும். இதனால், புதிய கட்டடதாரர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை.புதிய சொத்து வரி நடப்பு நிதியாண்டான ஏப்., மாதம் முதல் கணக்கிட்டு நடைமுறைப்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
எவ்வளவு உயர்கிறது?
திருப்பூர் மாநகராட்சியைப் பொறுத்தவரை, பகுதி அடிப்படையில், 3 பிரிவுகளாக வரி விதிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 'ஏ' பிரிவு எனப்படும் பிரதான ரோடுகள் அமைந்துள்ள பகுதிகளில் ஓட்டு வீடுகளுக்கு 3.40 ரூபாய்; கான்கிரீட் வீடுகளுக்கு 4.55 ரூபாய்; தொழிற்சாலை வரி விதிப்பில் 6.80 ரூபாய் மற்றும் 9.06 ரூபாய்; வர்த்தக வரிவிதிப்பு 10.20 ரூபாய் மற்றும் 13.59 ரூபாய் என சதுர அடிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.'பி' பிரிவு என்பது பிரதான ரோடுகளை சென்றடையும் முக்கியமான ரோடுகள் அமைந்த பகுதி. இப்பிரிவில் வீடுகளுக்கு 2.60 மற்றும் 3.47 ரூபாய்; தொழிற்சாலைகளுக்கு 5.20 மற்றும் 6.94 ரூபாய்; தொழிற்சாலைகளுக்கு 7.81 மற்றும் 10.41 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது.'சி' பிரிவு நகரில் உள்ள சிறிய தெரு மற்றும் குறுக்கு தெருக்கள் அடங்கிய பகுதி. இவற்றில் வீடுகளுக்கு 2.03 மற்றும் 2.70 ரூபாய்; தொழிற்சாலைகளுக்கு 4.05 மற்றும் 5.40 ரூபாய்; வர்த்தக கட்டடங்களுக்கு 6.07 மற்றும் 8.10 ரூபாய் என்ற விகிதத்தில் சொத்து வரி விதிக்கப்படும்.
Advertisement