வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர் : அன்னிய பண மதிப்பில் ஏற்பட்டுள்ள ஏற்ற, இறக்கங்கள், திருப்பூர் பின்னலாடை துறையினருக்கு சாதக, பாதகம் இரண்டையும் வழங்குகிறது.திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், உலகளாவிய நாட்டு வர்த்தகர்களிடம் ஆர்டர் பெற்று பின்னலாடை ரகங்களை தயாரித்து அனுப்புகின்றன. ஆடைகளின் விலையை பொறுத்தவரை, அமெரிக்க டாலர், யூரோ, பவுண்ட் மதிப்பிலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
இதனால், அன்னிய பண மதிப்பில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள், திருப்பூர் தொழில் துறையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.தற்போது மூன்று பண மதிப்பிலும் பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த மார்ச் மாதம் வரை, இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு 76.91 ரூபாயாக இருந்தது; தற்போது, 78.17 ரூபாயாக உயர்ந்துள்ளது.அதேநேரம், இந்திய ரூபாய்க்கு நிகரான பவுண்ட் மற்றும் யூரோ மதிப்புகள் சரிந்துவருகின்றன. மார்ச் மாதத்தில் 84.58 ரூபாயாக இருந்த யூரோ மதிப்பு, 81.94 ரூபாயாகவும்; 100.61 ரூபாயாக இருந்த பவுண்ட் மதிப்பு 94.47 ரூபாயாகவும் குறைந்துள்ளன.டாலரில் வர்த்தகம் மேற்கொள்ளும் ஏற்றுமதியாளர்களுக்கு, தற்போதைய சூழல் சாதகமானதாக உள்ளது;
![]()
|
ஆனால், டாலரில் பொருட்கள் வாங்கும் இறக்குமதியாளர்களுக்கு இது, பாதகமாகிறது. யூரோ, பவுண்ட் மதிப்பு குறைவால், ஐரோப்பா மற்றும் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்வோரும் கலக்கமடைந்துள்ளனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம்:அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு, திருப்பூர் பின்னலாடை ஏற்று மதியாளர்களுக்கு தற்காலிகமாக நன்மை அளிக்கும். கையிருப்பு ஆர்டர் மீதான ஆடைகளுக்கு, சற்று கூடுதல் விலை கிடைக்கும்.டாலர் தொடர்ந்து ஸ்திரத்தன்மையுடன் தொடருமா என்பது சந்தேகமே. எனவே, இப்போதைய டாலர் மதிப்பில் புதிய ஆர்டர்களை புக்கிங் செய்யலாமா எனகிற குழப்பம் ஏற்படுகிறது.அப்படியே டாலர் மதிப்பில் உயர்வு நிலை தொடர்ந்தாலும், வெளிநாட்டு வர்த்தகர்கள், புதிய ஆர்டர்களுக்கு, ஆடை விலையை குறைத்துநிர்ணயிக்க கட்டாயப்படுத்துவர். ஆடை தயாரிப்புக்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் விலை அதிகரிப்பால், பாதகமும் உள்ளது.
திருப்பூர் பின்னலாடை துறைஆலோசகர் சபரிகிரீஷ்:டாலர் மதிப்பு உயர்வால், அமெரிக்க சந்தைக்காக பின்னலாடை தயாரிக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர்களும்; பிற நாடுகளுக்கு டாலரில் வர்த்தகம் மேற்கொள்ளும் ஏற்றுமதியாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்; ஆடைகளுக்கு நான்கு முதல் ஐந்து சதவீதம் கூடுதல் விலை கிடைக்கும். நிர்ணயிக்கப்பட்டதைவிட ஆடை விலை குறையும் நிலை உருவாகியுள்ளனால், ஐரோப்பா மற்றும் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.ஆடை உற்பத்தி இயந்திரங்கள், ஆடைகளில் இணைக்கப்படும் பட்டன், ஜிப் உள்பட அக்சசரீஸ்கள், மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்புக்கு தேவையான துணி ரகங்கள் என, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின்விலை, டாலரிலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
அதனால், டாலர் விலை உயர்வு, இறக்குமதியாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கிறது. பொருட்கள் இறக்குமதிக்கு, 5 சதவீதம் வரை கூடுதல் முதலீடு செய்யவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.அன்னிய பண மதிப்புகள் இதே நிலையில் தொடர்வது கடினம். எப்போது வேண்டுமானாலும் டாலர் மதிப்பு சரிந்துவிடலாம். எனவே, ஒரு டாலர் மதிப்பு 75 ரூபாய் என கணக்கிட்டு ஆடை விலையை நிர்ணயிக்க வேண்டும்; வங்கிகள் வழங்கும் 'பார்வேர்டு கான்ட்ராக்ட்' சேவையை பயன்படுத்தி, பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். இதன் மூலம், வரும் நாட்களில் டாலர் மதிப்பு குறைந்தாலும், ஆடைகளுக்கு, தற்போதைய மதிப்பு அடிப்படையிலான விலை ஏற்றுமதியாளருக்கு கிடைத்துவிடும்.