வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் குறித்த வரலாற்றை, இளைஞர்களிடம் கொண்டு செல்ல, தமிழக பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
பெரும் தேக்கம்
வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கூட வெற்றி பெற்று விட்ட பா.ஜ.,வால், தமிழகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில், குறிப்பிடத்தக்க வெற்றியை பெற முடியவில்லை. தி.மு.க.,வின் மொழி அரசியல், திராவிட இன அரசியலைத் தாண்டி, பா.ஜ.,வால் வலுவான அரசியல் சக்தியாக மாற முடியவில்லை. பா.ஜ., என்பது வட இந்திய கட்சி, ஹிந்தி ஆதரவு கட்சி என்ற, தி.மு.க.,வின் பிரசாரத்தை முறியடித்து, தமிழகத்தில் வெற்றி பெற, 1996-ல் இருந்தே முயற்சித்து வருகிறது.
1998-ல் அ.தி.மு.க.,வுடனும், 1999-ல் தி.மு.க.,வுடனும் அமைந்த கூட்டணி, தமிழகத்தில் பா.ஜ.,வுக்கான கதவுகளை திறந்து விட்டன. ஆனாலும், 2001 சட்டசபை தேர்தல், 2004 லோக்சபா தேர்தல் தோல்வியால், பா.ஜ., வளர்ச்சியில் பெரும் தேக்கம் ஏற்பட்டது. கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுடன் பா.ஜ., அமைத்த மூன்றாவது அணிக்கு, 19 சதவீத ஓட்டுகளும், இரண்டு எம்.பி.,க்களும் கிடைத்தனர். ஆனாலும், இந்த கூட்டணியை பா.ஜ.,வால் தக்க வைக்க முடியவில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை, தி.மு.க., தான் பா.ஜ.,வின் கொள்கை எதிரி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்தவரை, தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள், அ.தி.மு.க.,வுக்கு கிடைத்து வந்தன. ஜெயலலிதா மறைவுக்குப் பின், அந்த ஓட்டுக்களை குறிவைத்து, பா.ஜ., காய் நகர்த்தி வருகிறது. தமிழக பா.ஜ., தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை, கட்சியை வளர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தமிழ் மொழி, பண்பாட்டுக்கு எதிரான கட்சி பா.ஜ., என்ற தி.மு.க.,வின் பிரசாரத்தை முறியடிக்க, என்ன செய்யலாம் என்பது குறித்து, பா.ஜ., ஆதரவு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆர்வம் காட்டாதது ஏன்?
இது தொடர்பாக, பா.ஜ., தலைவர் ஒருவர் கூறியதாவது: தி.மு.க., என்னதான் நாத்திகம் பேசினாலும், தமிழகத்தின் அடையாளமாக இன்றும் இருப்பது கோவில்கள் தான். இந்த கோவில்களை கட்டியவர்கள் சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள். ஆனால், இந்த மன்னர்களை, தமிழகத்தின் அடையாளமாக காட்டாமல், ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி என, தமிழகத்தின் அடையாளத்தையே, தி.மு.க., மாற்ற முயற்சித்து வருகிறது. தஞ்சை பெரிய கோவிலான, சிவன் கோவிலை கட்டிய ராஜராஜ சோழனுக்கு எதிராகவும் இப்போது, தி.மு.க.,வினர் பேசத் துவங்கியுள்ளனர். எனவே, தமிழகத்தின் அடையாளமாக சோழ, பாண்டிய,பல்லவ மன்னர்களை, மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில், 'மகாராணா' என்ற நுால் வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'இந்திய வரலாற்று ஆசிரியர்கள், முகலாயர்கள் வரலாற்றை தான் எழுதியுள்ளனர். சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் வரலாற்றை எழுத ஆர்வம் காட்டாதது ஏன்?' என, கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக அண்ணாமலையிடமும், அமித் ஷா பேசியிருக்கிறார்.
எனவே, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் பற்றிய புத்தகங்கள், குறும்படங்கள் வெளியீடு, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்துதல், ராஜராஜசோழன் போன்ற புகழ் பெற்ற மன்னர்களின் பெயர்களில் விருதுகள் வழங்குதல், கண்காட்சி நடத்துதல் என பல்வேறு நிகழ்வுகளுக்கு, பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.