
விளையாட்டு உலகம் என்பது உண்மையில் உற்சாகமானது தனியானது ஆரோககியமானது அற்புதமானது ஆனால் விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து முடிந்த தேசிய தடகளப் போட்டியில் நாடு முழுவதும் இருந்து வந்து கலந்து கொண்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகளால் நான்கு நாட்கள் மைதானமே களைகட்டியிருந்தது.

ஒட்டம்,நீளம் தாண்டுதல்,உயரத்தாண்டுதல்,குண்டு எறிதல்,ஈட்டி எறிதல்,தடைதாண்டி ஒட்டம் என்று நடைபெற்ற பல்வேறு தடகளப் போட்டியில் பங்கேற்றவர்கள் பலர் எவ்வித எதிர்பார்ப்புமின்றி, எதிர்ப்புமின்றி எல்லாவற்றையும் அட்ஜெஸ்ட் செய்து கொண்டு போட்டியில் பங்கேற்றனர்

அவர்களுக்கு விளையாட்டு மட்டும்தான் குறிக்கோள் அது கற்றுத்தந்த ஒழுங்கை கடைப்பிடித்தனர் ஆனால் நாம் போட்டிகளை இன்னும் தரமாக நடத்தியிருக்கலாம் என்பது பார்வையாளர்கள் கருத்து.

வீரர்களுக்கு தேவை உற்சாகமான பார்வையாளர்கள் ஆனால் பார்வையாளர்கள் பத்து பேர் இருந்திருந்தாலே பெரிய விஷயம் பெரும்பாலும் ‛கேலரி' காலியாகவே இருந்தது, போட்டி நடத்தியவர்கள் போதுமான விளம்பரம் செய்யவில்லை என்பதுதான் இதற்காக குறை, நாளிதழ்களில் பெரிய அளவில் விளம்பரம் கொடுத்திருந்தால் பார்வையாளர்கள் வந்திருப்பர்,வீரர்கள் மகிழ்ந்திருப்பர்.

பிரம்மாண்டமாக நடக்கும் இந்த விளையாட்டுப் போட்டியினை பற்றி படமெடுக்க வந்த புகைப்படக்கலைஞர்களை ஏனோ போட்டியாளர்கள்,‛ இங்கே நிற்காத, அங்கே போ' என்று இம்சித்துக் கொண்டே இருந்தனர், அனைவருமே அனுபவமுள்ள ஸ்போர்ட்ஸ் போட்டோகிராபர்கள்தான், ஆனால் ஏதோ கற்றுக்குட்டிகளைப் போல நடத்தினர், கடும் வெயிலில் காய்ந்த போதும் குடிதண்ணீர் கூட தராமல் விருந்தோம்பல் காத்தனர்.

பெரும்பாலான போட்டிகள் இரவில் நடக்கும் நிலையில் போதுமான வெளிச்சம் இருக்கவேண்டும் ஆனால் ஒளிபாய்ச்ச வேண்டிய விளக்குகள் பல பியூஸ் போயிருந்ததால் போதுமான வெளிச்சம் இல்லாத நிலையில்தான் போட்டிகள் நடந்தன.
அதே நேரம் இதற்கென ஒரு செயலி வைத்து அவ்வப்போது போட்டிகள் மற்றும் போட்டி பற்றிய முடிவுகளை உடனுக்குடன் தெரிவித்தனர் இது பாராட்ட வேண்டிய விஷயம்.
நடந்து முடிந்த போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை தமிழக அணிதான் வென்றது என்ற நிலையில் தலைமை மைதானத்தில் ஆரம்பித்து தடகளம் வரை தமிழக விளையாட்டுத்துறை தனிக்கவனம் செலுத்த வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட.
-எல்.முருகராஜ்