வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
ஆர்.விஜய், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடந்த ஓராண்டாக, சட்டசபையிலும், சட்டசபைக்கு வெளியிலும், அ.தி.மு.க., என்ற மாபெரும் இயக்கம், சிறந்த எதிர்க்கட்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறது' என, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், 'உதார்' விட்டிருக்கிறார். இதுநாள் வரை முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தான், இப்படி உதார் விட்டுக் கொண்டிருந்தார். அந்த வரிசையில், இப்போது பன்னீர்செல்வமும் இணைந்துள்ளார்.
அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., ஒவ்வொரு நாளும் பொழுது புலர்ந்ததும், ஆட்சியாளர்கள் மீது ஒரு ஊழல் புகாரை எடுத்து விடும். கமிஷன், கலெக் ஷன், கரப்ஷன் என்று எதுகை, மோனையோடு கொளுத்தி போடும்.அதுபோல, இந்த ஓராண்டு காலத்தில், அ.தி.மு.க., இதுவரை ஆளுங்கட்சி மீது ஏதாவது ஊழல் குற்றச்சாட்டை சொல்லி இருக்கிறதா? சட்டசபைக்கு சென்று அமர்வதும், ஸ்டாலினையும், உதயநிதியையும் கழக உறுப்பினர்கள் போற்றிப் புகழ்ந்து, பரணி பாடுவதை காது குளிர கேட்பதுடன், சபை முடிந்ததும் எழுந்து வெளியே வருவதையும் தவிர, அ.தி.மு.க., என்ன செய்து இருக்கிறது?
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஆளுங்கட்சி மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை அன்றாடம் தொடுத்து திகைக்க வைக்கிறார். அவரின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள முடியாமல், காவல் துறை அதிகாரிகளையும், அரசுத் துறை அதிகாரிகளையும் கூட்டம் கூட்டமாக, ஸ்டாலின் அரசு இடமாற்றம் செய்து கொண்டிருக்கிறது. அவர்களை இடமாற்றம் செய்துவிட்டால், குற்றச்சாட்டுகளும், ஊழல் புகார்களும், புஸ்வாணமாகி விடும் என்று, எந்த மகானுபாவர் ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை நல்கினாரோ தெரியவில்லை.பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்காவிட்டால், கோட்டையை நோக்கி பேரணி நடத்துவேன் என்றார் அண்ணாமலை; நடத்திக் காட்டினாரா இல்லையா? இரண்டு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்தோடு கூறுவேன் என்றார்; கூறினாரா இல்லையா?

பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்து, அதை கண்டுக்காமல் இருக்கும் ஆளுங்கட்சியை எதிர்த்து, அ.தி.மு.க., இதுவரை என்ன செய்திருக்கிறது? ஆட்சியிலேயே இல்லாத நிலையில், அண்ணாமலைக்கு கிடைக்கும் தகவல்கள், தொடர்ந்து 10 ஆண்டு காலம் ஆட்சியில் அமர்ந்து கோலோச்சி கொண்டிருந்த அ.தி.மு.க.,வுக்கு கிடைக்கவில்லை என்றால், அவர்கள் எந்த அளவுக்கு நிர்வாகம் செய்து கொண்டிருந்தனர் என்பது தெரிய வருகிறது. நிலைமை இவ்வாறிருக்க, 'மிகச் சிறந்த எதிர்க்கட்சி அ.தி.மு.க.,' என்று கூற வெட்கமாக இல்லையா? அப்படி சொல்ல நாகூசவில்லையா?
பன்னீர்செல்வம் தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்வது எப்படி இருக்கிறது என்றால், நகரம் என்ற திரைப்படத்தில். வடிவேலு, 'நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான்' என்று வாலன்டியராக போலீஸ் ஜீப்பில் ஏறிக்கொள்வது போல உள்ளது. இவர்களை பார்க்கும் போது, கடவுளே... இப்படியா ஆக வேண்டும்? என்றே கேட்கத் தோன்றுகிறது.