வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: பருத்தி பஞ்சு விலை, சர்வதேச அளவில் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால், செயற்கை பஞ்சையும் பருத்தி பஞ்சையும் கலவையாக்கி, நுால் தயாரிக்கப்படுகிறது. இதில் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு சந்தையில் வரவேற்பு கிடைத்துள்ளது.

சந்தையில் ஒரு கிலோ பஞ்சு - 330 ரூபாய்; பாலியஸ்டர் பஞ்சு - 126 ரூபாய், விஸ்கோஸ் போன்ற மரக்கூழ் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பஞ்சு விலை,195 ரூபாயாக உள்ளன. இவற்றை வாங்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள், கலவையாக நுால் உற்பத்தி செய்து, ஆடை தயாரிக்கின்றனர்.
விலை குறைவாக இருப்பதால், இந்த ரக ஆடைகளை பயன்படுத்தும் எண்ணம் மக்களிடம் பரவலாகி வருகிறது.சர்வதேச அளவில், கடந்த, 10 ஆண்டுகளாக செயற்கை பஞ்சு கலந்து தயாரிக்கப்படும் ஆடைகளின் தேவை அதிகரித்துள்ளது. தற்போது பருத்தி பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்திருப்பதால் செயற்கை பஞ்சால் தயாரித்த ஆடைகளை பயன்படுத்துவது மேலும் அதிகரித்துள்ளது. அமெரிக்க சந்தையிலும், செயற்கை பஞ்சு கலந்த ஆடைகள் அமோகமாக விற்பனையாகின்றன.
சுற்றுச்சூழல் சார்ந்த ஆடை தயாரிப்பில், பாலிதீன் பாட்டில்களில் இருந்து பஞ்சு தயாரித்து, அதை ஆடைகளாக தயாரிக்கும் 'ரீ-சைக்கிளிங்' தொழில்நுட்பமும் வளர்ந்து வருகிறது. அதனால், தற்போது செயற்கை பஞ்சு மற்றும் பருத்தி பஞ்சு கலந்த கலவையில் உற்பத்தியாகும் நுாலுக்கு கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. அதில் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு மார்க்கெட்டில் வரவேற்பு கிடைத்திருப்பதோடு, வர்த்தகர்களுக்கு நல்ல விலையும் கிடைக்கிறது.

'மாத்தி யோசிக்கணும்'
நுாற்பாலை உரிமையாளர்கள் கூறியதாவது:பருத்தி விலை குறைந்தால் மட்டுமே பருத்தி சார்ந்த உற்பத்தி பொருளாதாரம் மீண்டும் முழுமையாக செயல்பட துவங்கும். தற்போதைய விலை ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதால், பருத்தி கொள்முதல் முழுமையாக நின்று விட்டது. விலை அதிகமென புலம்பிக் கொண்டிருப்பதை தவிர்த்து, மாற்றுப்பாதையை யோசிக்க வேண்டும்.
தற்போது செயற்கை பஞ்சு சம்மந்தமான பொருட்கள் தயாரிப்பில் தொழில்துறையினர் முனைப்பாக உள்ளனர். உற்பத்தி செய்யப்படும் துணிக்கேற்ப, செயற்கை பஞ்சு மற்றும் பருத்தி பஞ்சு கலப்பு விகிதத்தை மாற்றிக் கொள்வோம். மில்களின் தேவைக்கேற்ப நுாற்பு செய்து நுாலாக மாற்றிக்கொடுக்கிறோம். இதற்கான கட்டமைப்பை பலப்படுத்த, மில்கள் அக்கறை காட்டி வருகின்றன.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.