கோவை: சமூக நலத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், கடந்த இரண்டு ஆண்டுகளில், 192 குழந்தை திருமண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய நவீன காலத்தில், சமூக வலைதளங்கள், சினிமா மற்றும் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதனால், பள்ளி பருவத்திலேயே, பருவக்கோளாறால் மாணவ மாணவியர் பலரும், காதல் வயப்பட்டு திருமணம் செய்து, வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.
கோவை மாவட்டத்தில், 2019, 2020ம் ஆண்டு வரை குழந்தை திருமணங்கள், 100க்கும் குறைவாகவே இருந்த நிலையில், கொரோனாவுக்கு பின், 2021ம் ஆண்டு 146, நடப்பாண்டு மே மாதம் வரை 46 என, 192 குழந்தை திருமண புகார்கள் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பதின்பருவத்தில் ஏற்படும் காதல், குடும்பங்களின் வறுமை, பெற்றோர் பாதுகாப்பு இல்லாத குழந்தைகளே, பெரும்பாலும் குழந்தை திருமணங்களில் சிக்கிக்கொள்கின்றனர். இதில், பெற்றோர் செய்து வைத்த திருமணத்தை விட, காதல் திருமணம் செய்தவர்களே அதிகம். திருமணத்திற்கு முன்பே உறவு வைத்துக் கொண்டு, திருமணம் செய்த வேதனைக்குரிய சம்பவங்களும் உள்ளன. 2021ல் 146 குழந்தை திருமணங்கள் 'ரிப்போர்ட்' ஆகியுள்ளன.

நடப்பாண்டில், மே மாதம் வரை, 46 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இதில், சம்பந்தப்பட்டவர்கள் மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளோம். குழந்தை திருமண சட்டப்படி சம்பந்தப்பட்ட மணமகன், பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், மண்டப உரிமையாளர் என சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதியப்படும். குற்றத்துக்கு, 2 முதல், 3 ஆண்டு சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். தற்போது, ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று மாணவிகள் மட்டுமல்லாது மாணவர்களிடமும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
குழந்தை திருமண புகாருக்கு...1098
பெண் பாதுகாப்பு புகாருக்கு....181
சட்டம் என்ன சொல்கிறது?
குழந்தை திருமண தடை சட்டத்தின் படி, பெண்ணுக்கு, 18, ஆணுக்கு, 21 வயதும் பூர்த்தியடைய வேண்டும். இவ்வயது பூர்த்தியாகாமல் நடைபெறும் அனைத்து திருமணங்களும் சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றம். திருமணத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சம்மந்தப்பட்ட அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.