வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு வருவது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி., ராகுல், ‛நாட்டு மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது பிரதமருக்குப் புரியவில்லை' என விமர்சித்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் அதிகப்படியான இளைஞர்களை சேர்க்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டம் அக்னிபத். இத்திட்டத்தின்கீழ் ராணுவத்தின் முப்படைகளிலும் 4 ஆண்டுகால பணிக்கு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கான வயது வரம்பு 17.5 முதல் 21 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு அறிவித்த இந்த ‛அக்னிபத்' திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் வெளிப்பாடாக பீஹார், உ.பி., தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெருமளவு போராட்டம் வெடித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறுகையில், ‛அக்னிபாத் - இளைஞர்கள் நிராகரித்தனர், வேளாண் சட்டம் - விவசாயிகள் நிராகரித்தனர், பணமதிப்பிழப்பு - பொருளாதார நிபுணர்கள் நிராகரித்தனர், ஜிஎஸ்டி - வர்த்தகர்கள் நிராகரித்தனர். நாட்டு மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது பிரதமருக்குப் புரியவில்லை. ஏனெனில் அவர் தனது நண்பர்களின் குரலைத் தவிர வேறு எதையும் கேட்கவில்லை' என விமர்சித்துள்ளார்.