
ஒரு பெண் கடற்படை அதிகாரியாவது பெரிதல்ல அது புதிதுமல்ல ஆனால் படுகர் இனத்தை சேர்ந்த ஒரு பெண் இந்த பொறுப்பிற்கு வருவதுதான் புதிது பெரிது.
காரணம் இவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும் நிலைநிறுத்திக் கொள்ளவும் ரொம்பவே சிரமப்பட்டுள்ளனர்.
திப்புசுல்தான் படையினரிடம் இருந்து தப்பிக்க மைசூரில் இருந்து வெளியேறி காடுகள் வழியாகவே நடந்துவந்து நீலகிரி மலைப்பகுதியில் தஞ்சம் அடைந்தவர்கள்.
படுகர்,பாடகர்,கெளடர் என்றழைக்கப்படும் இவர்கள் நீலகிரியில் உள்ள தோடர்கள்,காடர்கள்,இருளர்கள் போல பழங்குடியினர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் இல்லை ஆனாலும் தங்களுக்கு என்று தனித்தெய்வம், தனிவழிபாடு, வரிவடிவம் இல்லாத மொழி என்று தனித்தன்மையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

கடுமையான உழைத்தனர் கல்உடைத்தனர் சாலை போடும் வேலையில் ஈடுபட்டனர் தேயிலை தோட்ட தொழிலாளர்களாக பனியிலும் வெயிலிலும் வாடினர் அந்த உழைப்பு காரணமாக இன்று சிலர் தேயிலை தோட்ட முதலாளிகளாகியுள்ளனர்,சமவெளிப்பகுதியில் உள்ளவர்கள் போலவே கலாச்சார மாற்றத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஆனாலும் கல்விதான் நம்மை மேம்படுத்தும் மற்றவர்களிடம் அடையாளப்படுத்தும் என்பதில் உறுதியாக நம்பினர்.,ஆகவே நீண்ட துாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு சிரமம் பாராமல் தங்களது பிள்ளைகளை அனுப்பி படிக்கவைத்தனர்.
அவர்கள் பட்ட சிரமம் வீணாகவில்லை இப்போது அவர்கள் இனத்தில் நிறைய மருத்துவர்,பொறியாளர்கள் உள்ளனர்.இப்போது முதன் முறையாக கடற்படை பெண் அதகாரியாக மீரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பொறியியல் படித்து முடித்து எல்லோரையும் போல ஐடியில் வேலை பார்த்து காலத்தை ஒட்டப்போகிறோமா? அல்லது நாட்டிற்கு சேவை செய்யும் துறையை தேர்ந்து எடுப்போமோ? என்ற நிலையில் நாட்டுக்சேவை செய்வதே மேல் என்று முடிவு செய்து கடற்படைக்கு விண்ணப்பித்தார். பல்வேறு கடுமையான சோதனை மற்றும் பயிற்சிகளுக்கு பிறகு இப்போது கொச்சியில் உள்ள விக்ரந்த் போர்க்கப்பலின் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
என்னைத் தொடர்ந்து இன்னும் பல பெண்கள் இது போன்ற தேசவைக்கு வரவேண்டும் அதுதான் என்விருப்பம் என்று கம்பீரம் கலந்த புன்னகையுடன் கூறிமுடித்தார் கடற்படை அதிகாரி மீரா.
-எல்.முருகராஜ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE