பாட்னா: டில்லிக்கு கிளம்பிய ஸ்பெஸ் ஜெட் விமானத்தில், இன்ஜீனில் தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அந்த விமானம் பாட்னாவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
ஸ்பெஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, 185 பேருடன் பீஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து டில்லிக்கு கிளம்பியது. சிறிது நேரத்தில் இடது பக்க இன்ஜீனில் தீ பிடித்தது. இதனையடுத்து அந்த விமானம் அவசரமாக பாட்னாவில் தரையிறக்கப்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால், விமான நிலையத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இது தொடர்பாக பாட்னா மாவட்ட கலெக்டர் கூறுகையில், டில்லி சென்ற விமானத்தில் இன்ஜீனில் தீபிடித்ததால், பாட்னாவுக்கு மீண்டும் திரும்பியது. இன்ஜீனில் ஏற்பட்ட தீயை உள்ளூர் மக்கள் பார்த்து, விமான நிலைய அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். விமானத்தில் இருந்த 185 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர் என்றார்.