சென்னை:அ.தி.மு.க.,வின் ஒற்றைத் தலைமை விவகாரத்தில், பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரிடமும் பிடிவாதம் நீடிப்பதால், மூத்த தலைவர்களின் சமரச முயற்சி எடுபடவில்லை. முன்னாள் அமைச்சர்கள் தம்பிதுரை, செங்கோட்டையன் துாது சென்றும், இருவரின் நிலையிலும், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. கட்சியின் சட்ட விதிகளை மேற்கோள் காட்டி, ஆளாளுக்கு விளக்கம் அளிப்பதால், பிரச்னை மேலும் பெரிதாகியுள்ளது.
அ.தி.மு.க.,வில், ஒற்றைத் தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போதுள்ள, இரட்டை தலைமை முறையை நீக்கிவிட்டு, ஒற்றைத் தலைமை பதவிக்கு வர, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி முடிவு செய்துள்ளார்.இதற்கு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்பது, அவரது விருப்பமாக உள்ளது. இருவரும், தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர்.கடந்த, 14ம் தேதி ஒற்றைத் தலைமை பிரச்னை எழுந்தது முதல், இருவரும் தனித்தனியே தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.அ.தி.மு.க.,வின், 75 மாவட்ட செயலர்களில், 64 பேர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்; பன்னீர்செல்வம் பக்கம், 11 மாவட்ட செயலர்கள் உள்ளனர்.நேற்று இளைஞர் அணி செயலர் சிவபதி, இணை செயலர் சுனில், துணை செயலர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள், பழனிசாமியை சந்தித்து ஆதரவு அளித்தனர்.
ஆதரவு
மாணவர் அணி செயலர் விஜயகுமார் தலைமையில், அந்த அணியின் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்,இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளும், பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஜக்கையன், தேனி நகர செயலர், நகரப் பொருளாளர் உட்பட பல்வேறு நிர்வாகிகளும், பழனிசாமியை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.சில ஒன்றிய, நகர நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, கர்நாடக மாநில முன்னாள் செயலர் புகழேந்தி போன்றோர், பன்னீர்செல்வத்தை சந்தித்துஆதரவு தெரிவித்தனர்.
சமரச முயற்சி
கட்சியின் மூத்த தலைவர்களான செங்கோட்டையன், தம்பிதுரை ஆகியோர், நேற்று காலை பழனிசாமியை சந்தித்தனர்.அதன்பின் பன்னீர்செல்வத்தையும் சந்தித்துப் பேசினர். பின், மீண்டும் பழனிசாமியை சந்தித்தனர். துாதர்களாக செயல்பட்டு, இருவரும் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை.பழனிசாமி தரப்பில், 'ஒற்றைத் தலைமையாக பழனிசாமியை ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் பதவியை பெற்றுக் கொள்ளலாம்' என்று, பன்னீர்செல்வத்திடம் தெரிவித்து உள்ளனர்.
'அதை ஏற்க மறுத்த அவர் தரப்பு, 'பொதுக்குழுவை தற்போது ஒத்தி வைக்க வேண்டும். இரட்டைத் தலைமையே தொடர வேண்டும்' என, உறுதியாக தெரிவித்துஉள்ளது. அதேபோல, முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜுவும், இரு தரப்பிலும் சமாதானம் ஏற்படுத்த முயற்சித்தார்; அவரின் முயற்சியும் வெற்றி பெறவில்லை.
பன்னீர்செல்வம் விடுவிப்பு?
அதைத் தொடர்ந்து பழனிசாமி தரப்பில், பொதுக்குழுவில் இரட்டைத் தலைமைக்கு பதிலாக, ஒற்றைத் தலைமையை கொண்டு வர தீர்மானம் இயற்றுவது. இல்லையெனில், ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து பன்னீர்செல்வத்தை விடுவித்து விட்டு, அந்த பொறுப்பை பழனிசாமி கூடுதலாக கவனிக்க தீர்மானம் இயற்றுவது உட்பட பல்வேறு வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில், பழனிசாமி தரப்பு எடுக்கும் முயற்சிகளை நீதிமன்றம் சென்று தடுப்பது; பொதுக்குழு நடக்காமல் இருக்க, நீதிமன்றத்தில் தடை பெறுவது குறித்தும், பன்னீர்செல்வம் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.நேற்று ஆறாவது நாளாக, இரு தரப்பிலும் தொடர் ஆலோசனை நடந்தது. பழனிசாமி வீட்டில் நடந்த ஆலோசனையில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், உதயகுமார், விஜயபாஸ்கர், கே.பி.முனுசாமி என ஏராளமானோர் பங்கேற்றனர்.
பழனிசாமி தரப்பு, தங்களுக்கு ஆதரவு அதிகம் உள்ளதால், பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டி விட்டு, பழனிசாமியிடம் தலைமை பதவியை வழங்குவதில் தீவிரமாக உள்ளது. இரு தரப்பிலும், பல கட்ட பேச்சு நடந்தும், தீர்வு ஏற்படவில்லை.
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில், ''அ.தி.மு.க.,வுக்கு ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம்.இதை தொண்டர்கள் விரும்புகின்றனர். பொதுக்குழுவில் முடிவு தெரியும்,'' என்றார். கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில இணை செயலர் இன்பதுரை கூறுகையில், ''கட்சி பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது. அதில், யாரையும் நீக்க முடியும்,'' என்றார்.
கர்நாடக அ.தி.மு.க., முன்னாள் செயலர் புகழேந்தி கூறுகையில், ''பழனிசாமியால் கட்சி சின்னாபின்னமாகி விட்டது. ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்ட பன்னீர்செல்வம், கட்சிக்காக, முதல்வர் பதவி உள்ளிட்ட எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தார்.''அவரைப் போய் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்கின்றனர்,'' என்றார்.
இதனிடையே, 'எந்த தீர்மானமாக இருந்தாலும், ஒருங்கிணைப்பாளர்கையெழுத்து தேவை. எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம்' என, பன்னீர்செல்வம் தரப்பினர் பேட்டி அளித்து வருகின்றனர்.இப்படி ஆளாளுக்கு பேட்டி அளித்து வருவதும், கட்சிக்கு சிக்கலை அதிகரித்து உள்ளது
கட்சி தலைமை பதவிக்கு, பன்னீர்செல்வம் - பழனிசாமி இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. கட்சிக்கு ஒற்றைத் தலைமையை கொண்டு வர, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தும் படிவத்தில், பழனிசாமி தரப்பினர், மாவட்ட செயலர்கள், தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர்.
பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று, ஒற்றைத் தலைமை கொண்டு வர, பொதுக் குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக, இந்தப் பணி நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.அதேபோல, இரட்டை தலைமை தொடர வும், பொதுக்குழுவை ஒத்தி வைக்கவும் கோரும் படிவத்தில், பன்னீர்செல்வம் தரப்பினர் கையெழுத்து பெற்று வருகின்றனர்.