வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை,-தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவராக ஆடிட்டர் சி.ஜி.வி.கணேசன் நேற்று பதவியேற்றார்.தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர் தேர்தல் மே 29ம் தேதி நடந்தது. இதில், ஆடிட்டர் சி.ஜி.வி.கணேசன் வெற்றி பெற்றார். இவர் மூன்று ஆண்டுகளுக்கு இப்பொறுப்பை வகிப்பார்.
![]()
|
பதவி ஏற்பு விழா
இவர், பிராமணர் சங்க நிறுவன தலைவர் சி.ஜி.வெங்கட்ராமனின் மூத்த மகன். தந்தையுடன் இணைந்து, 40 ஆண்டுகளாக ஆன்மிக, சமூக மற்றும் சேவைப்பணியில் ஈடுபட்டவர்.கோவை மாவட்ட சங்க தலைவராகவும், மாநில பொருளாளராகவும், பொதுச்செயலராகவும் பணிபுரிந்தவர். கோவை, ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்க செயலர், கோவை சிருங்கேரி சங்கர மடத்தின் அதிகாரி என, பல பொறுப்புகளில் இருக்கிறார்.இதுவரை பிராமணர் சங்க மாநில தலைவராக பம்மல் ராமகிருஷ்ணன் இருந்து வந்தார். புதிய தலைவர் சி.ஜி.வி.கணேசன் பதவியேற்கும் விழா, கோவை ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்க அரங்கில் நேற்று நடந்தது.
சங்கத்தின் மாநில தேர்தல் அதிகாரி முரளி, வெற்றி பெற்ற புதிய தலைவர் கணேசனுக்கு சான்று வழங்கினார். இதையடுத்து, பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.விழாவில், பாரதிய வித்யாபவன் துணை தலைவரும், மூத்த வக்கீலுமான நாகசுப்ரமணியம் வாழ்த்தி பேசுகையில், ''மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர் சி.ஜி.வி.,கணேசனின் தந்தை சி.ஜி.வெங்கட்ராமன். யாரும் அவரது திறமையை எதிர்த்து கேள்வி கேட்காத வகையில் நேர்மையாகவும், கம்பீரமாகவும் வாழ்ந்தவர். ''அவரது ஆசிகளோடு இவரது சமூகப்பணி சிறக்கட்டும்,'' என்றார்.ராம்நகர் கோதண்டராமர் கோவில் செயலர் மோகன்சங்கர் பேசுகையில், ''வணிகத்தில் சிறந்து விளங்கும் பிராமணர்கள் ஆட்சியாளர்களாக வர வேண்டும். நம் சமுதாயத்தில் ஏழ்மையால் தவிப்பவர்களை நாம் கைதுாக்கிவிட வேண்டும்.
அதற்கான உதவிகளை என் வாழ்நாள் முழுக்க செய்வேன்,'' என்றார்.சங்க மாநில ஆலோசகரும், தொழிலதிபருமான ஜெகன் பேசுகையில், ''எந்த சமூகத்திற்கோ, ஜாதிக்கோ, இனத்துக்கோ பிராமணர்கள் எதிரானவர்கள் அல்ல; எங்களது ஆச்சார்யத்தையும், அனுஷ்டானத்தையும் வீட்டோடு வைத்துக் கொள்வோம். ''பொதுவெளியில் அனைவரும் சமம் என்ற நிலைப்பாடோடு வாழ்ந்து வருகிறோம்,'' என்றார்.
![]()
|
சி.ஐ.ஐ., அமைப்பு திருப்பூர் தலைவர் வேலுசாமி பேசுகையில், ''பொது வாழ்க்கைக்கு வருபவர்களுக்கு நல்ல மன தைரியம் வேண்டும். சட்டமும் விதிமுறைகளும் தெரிந்திருக்க வேண்டும். சேவை மனப்பான்மை இருக்க வேண்டும். ''இவை அனைத்தும் அவரது தந்தையை போன்று சி.ஜி.வி.கணேசனிடம் நிறையவே உள்ளது. அதனால் அவரது பணி சிறக்கும்,'' என்றார்.விழாவில் முன்னாள் தலைவர் பம்மல் ராமகிருஷ்ணனுக்கு, செங்கோல் வழங்கப்பட்டது. அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் விழாவில் பங்கேற்றனர்.
நிர்வாகிகள் எச்சரிக்கை
தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் ஆடிட்டர் சி.ஜி.வி.கணேசன், முன்னாள் தலைவர்
பம்மல் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோவையில் அளித்த பேட்டி:
பிராமணர்களை
தொடர்ந்து இழிவுப்படுத்தி பேசும் நிலை தமிழகத்தில் நீடிக்கிறது. இதை
அவ்வப்போது ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களுமே
செய்கின்றனர். இருப்பினும், எந்த தீங்கையும் நாங்கள் விளைவிக்கவில்லை. 'யு
டியூப்' சேனல்களில் பலரும் எங்கள் சமூகத்தை அவதுாறு செய்கின்றனர். இதற்கு
சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.பிராமணர்களை இழிவுப்படுத்துவது
தொடர்ந்தால், நாங்கள் போராட தயங்க மாட்டோம். பொருளாதாரத்தில் பின்தங்கிய
முற்பட்ட பிரிவினருக்கு வழங்கும், 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில்
பின்பற்ற வேண்டும். சிருங்கேரி சங்கர மட தர்மாதிகாரியாக இருந்து மறைந்த
சி.ஜி.வெங்கட்ராமனின் சிலையை, கோவையில் நிறுவ தமிழக அரசு அனுமதிக்க
வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.